நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு அரசு அதிகாரி தீக்குளித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு அரசு அதிகாரி தீக்குளித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 July 2019 11:15 PM GMT (Updated: 4 July 2019 1:56 PM GMT)

வேலூரில் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் அரசு அதிகாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்,

வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 52). வேலூர் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக அவர் மனசோர்வுடன் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் நேற்று காலை வழக்கம் போல அலுவலகத்துக்கு புறப்பட்டார். அப்போது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் அவர் வந்ததாக தெரிகிறது. இதற்காக மோகன் வீட்டில் இருந்து வரும் போதே ஒரு கேனில் பெட்ரோல் கொண்டு வந்துள்ளார்.

அலுவலகம் முன்பு வந்ததும் தான் கொண்டு வந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலிதாங்க முடியாமல் அலறினார். இதை பார்த்தவர்கள் ஓடிச்சென்று அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து மோகனை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகாயம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட கண்காணிப்பாளர் மோகன் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு அலுவலகத்தில் அதிகாரி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நுகர்பொருள் வாணிபகழக அலுவலக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story