மன்னார்குடியில் ஆசிரியரிடம் பஸ்சில் ரூ.5 லட்சம் திருட்டு போலீசார் விசாரணை


மன்னார்குடியில் ஆசிரியரிடம் பஸ்சில் ரூ.5 லட்சம் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 July 2019 3:45 AM IST (Updated: 5 July 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் ஆசிரியரிடம் பஸ்சில் ரூ.5 லட்சம் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார்குடி,

திருவாரூரை அடுத்த கீழப்புலியூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 52). இவர் குளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பரிடம் ரூ. 5 லட்சம் கடன் பெற்று மதுரையில் இருக்கும் தனது தங்கைக்கு சில மாதங்களுக்கு முன்பு கொடுத்துள்ளார். நேற்று அவரது தங்கை திருச்சிக்கு ராஜாவை வரச்சொல்லி கடன் வாங்கிய ரூ.5 லட்சத்தை அவரிடம் திருப்பி கொடுத்துள்ளார். பணத்தை ஒரு பையில் வைத்து கொண்டு திருச்சியில் இருந்து ராஜா பஸ்சில் மன்னார்குடிக்கு வந்துள்ளார். பின்னர் மன்னார்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறி அமர்ந்துள்ளார்.

ரூ.5 லட்சம் திருட்டு

மன்னார்குடி பஸ் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது மன்னார்குடி கீழ பாலம் பஸ் நிறுத்தத்தில் நின்றபோது 3 பெண்கள் பஸ்சில் ஏறினர். அதில் கைக்குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர் தங்களுக்கு இடம் கொடுக்குமாறு ராஜாவிடம் கூறியுள்ளார். ராஜாவும் தன் இடத்தில் இருந்து எழுந்து பணம் இருந்த பையை கீழே வைத்து விட்டு அவர்களுக்கு அருகிலேயே நின்று கொண்டு இருந்தார். பஸ் நாலாநல்லூர் என்ற இடத்தில் நின்றபோது, அந்த பெண்கள் இறங்கி சென்று விட்டனர். இந்தநிலையில் ராஜா தான் வைத்திருந்த பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ.5 லட்சத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா மன்னார்குடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story