கூடங்குளம் அருகே விசைப்படகால் மோதியதில் கடலில் விழுந்த மீனவர் கதி என்ன? கோஷ்டி மோதலில் 5 பேர் காயம்
கூடங்குளம் அருகே நாட்டுப்படகு மீது விசைப்படகை மோதியதில், கடலில் விழுந்து மாயமான மீனவர் கதி என்ன? என்பது தெரியவில்லை.
ராதாபுரம்,
கூடங்குளம் அருகே நாட்டுப்படகு மீது விசைப்படகை மோதியதில், கடலில் விழுந்து மாயமான மீனவர் கதி என்ன? என்பது தெரியவில்லை. மேலும் இருதரப்பு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேர் காயம் அடைந்தனர்.
வலையை தேடிச் சென்றனர்நெல்லை மாவட்ட கடல் எல்லை பகுதி கடற்கரையான கூத்தங்குழி மீனவ கிராமம் கூடங்குளம் அருகே அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நாட்டுப்படகு மூலம் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்கள் கடலுக்கு சென்று விட்டு நேற்று அதிகாலையில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு சில மீனவர்களின் வலைகள் கடலில் தவறி விழுந்துள்ளது. இதனை தேடி நேற்று காலை 6 மணி அளவில் 3 நாட்டு படகுகளில் கூத்தங்குழியை சேர்ந்த மீனவர்கள் டிலைட் (வயது 50), வினோ (35), சகாயம் (47), அஜித், டைசன் (25), சுரேஷ் ஆகியோர் கடலுக்கு சென்றனர். சுமார் 6 நாட்டிக்கல் தூரத்தில் கூத்தங்குழி மீனவர்கள் கடலுக்குள் வலையை தேடி கொண்டு இருந்தனர்.
கோஷ்டி மோதல்அப்போது குமரி மாவட்டம் சின்னமுட்டத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் மீனவர்கள் அப்பகுதிக்கு வந்தனர். வலையை தேடிய மீனவர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதால் விசைப்படகை இயக்கி வந்த சின்னமுட்ட பகுதி மீனவர்கள், டிலைட் இயக்கிக் கொண்டிருந்த நாட்டுப்படகு மீது மோதியதாக தெரிகிறது. இதில் நிலைதடுமாறி டிலைட் கடலுக்குள் விழுந்தார். மாயமான அவர் கதி என்ன? என்பது தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து இருதரப்பு மீனவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. நாட்டுப்படகில் இருந்தவர்கள் மீது விசைப்படகு மீனவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் நாட்டுப்படகு மீனவர்களான வினோ, சகாயம், அஜித், டைசன், சுரேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பித்து கரைக்கு திரும்பினர். அவர்கள் சிகிச்சைக்காக கூடங்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேடும் பணிமேலும் கடலில் விழுந்து மாயமான மீனவர் டிலைட்டை, கடலோர காவல் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் கூடங்குளம் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.