பாம்பனில் பலத்த சூறாவளி காற்றால் ரெயில்கள் தாமதமாக சென்றன; தங்கச்சிமடத்தில் கடல் உள்வாங்கியதால் பவளப்பாறைகள் பாதிப்பு


பாம்பனில் பலத்த சூறாவளி காற்றால் ரெயில்கள் தாமதமாக சென்றன; தங்கச்சிமடத்தில் கடல் உள்வாங்கியதால் பவளப்பாறைகள் பாதிப்பு
x
தினத்தந்தி 6 July 2019 4:45 AM IST (Updated: 6 July 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

பாம்பனில் பலத்த சூறாவளி காற்றால் ரெயில்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக சென்றன. தங்கச்சிமடத்தில் கடல் உள்வாங்கியதால் பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டன.

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடந்த 4 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசியதுடன் கடல் கொந்தளிப்பாகவே காணப்பட்டது. இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் 5–வது நாளாக நேற்றும் பலத்த சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்றால் 5–வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. காற்றின் வேகம் குறையும் வரையிலும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது எனவும் மீன்துறை அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் 1000–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஏராளமான நாட்டுப்படகுகளும் மீன் பிடிக்க செல்லாமல் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்த கடல் பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று சுமார் 300 மீட்டர் தூரம் கடல் உள்

வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் உள்ள ஏராளமான அரிய வகை பவளப்பாறை உயிரினங்கள் சேதமடைந்தும், உயிரிழந்தும் கடற்கரையில் கிடந்தன. அதோடு சிப்பிகள், சங்குகளும் கிடந்தன. இந்த நிலையில் பாம்பன் பகுதியில் வீசி வரும் பலத்த சூறாவளி

காற்று காரணமாக ராமேசுவரத்தில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு சென்னைக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் பாம்பன் ரெயில்வே நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.45 மதுரைக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரெயிலும் புறப்படவில்லை. இரவு 8.45 மணிக்கு மேல் காற்றின் வேகம் குறைந்ததால் அடுத்தடுத்து 2 ரெயில்களும் புறப்பட்டுச்சென்றன.


Next Story