செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதில் லாரி டிரைவர் படுகாயம்; 2 பேர் கைது


செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதில் லாரி டிரைவர் படுகாயம்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 July 2019 11:10 PM GMT (Updated: 5 July 2019 11:10 PM GMT)

செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு,

கரூர் மாவட்டம் குளித்தலை சின்ன பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 32). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து லாரியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றிக் கொண்டு சென்றார். செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் செல்லும்போது சுங்கச்சவடி ஊழியர்கள், சிவா ஓட்டி வந்த லாரியை மறித்து சுங்கவரி கேட்டனர்.

அப்போது அவர் மாத சுங்கவரி செலுத்துவதாக கூறியுள்ளார். அப்போது சுங்கச்சாவடியில் உள்ள ஸ்கேனிங் கருவி செயல்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுங்க கட்டணத்தை செலுத்தி விட்டு செல்ல வெண்டும் என்று ஊழியர்கள் கூறியுள்ளனர் இதனால் லாரி டிரைவர் சிவாவுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் லாரியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சிவாவை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த லாரி டிரைவர் சிவா படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் டிரைவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியது உறுதியானது. இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்களான மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தாமோதரன் (வயது 32), புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சூர்யா(25) இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story