இரிடியம் சிலைக்கு சக்தி கிடைக்க சேலத்தில் பெண்களை வைத்து நிர்வாண பூஜை போலீஸ் கமி‌ஷனரிடம் பரபரப்பு புகார்


இரிடியம் சிலைக்கு சக்தி கிடைக்க சேலத்தில் பெண்களை வைத்து நிர்வாண பூஜை போலீஸ் கமி‌ஷனரிடம் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 6 July 2019 10:45 PM GMT (Updated: 6 July 2019 1:44 PM GMT)

இரிடியம் சிலைக்கு சக்தி கிடைக்க சேலத்தில் பெண்களை வைத்து நிர்வாண பூஜை செய்யப்படுவதாக போலீஸ் கமி‌ஷனரிடம் பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது.

சேலம்,

சேலத்தை சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவர் சேலம் போலீஸ் கமி‌ஷனர் செந்தில்குமாரை சந்தித்து பரபரப்பு புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:–

கடந்த ஆண்டு எனது கணவர் இறந்து விட்டார். நானும், எனது மகனும் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம். நாங்கள் கடந்த 4 மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களது வீட்டின் உரிமையாளர் மகன் அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர் பலரிடம் வாங்கிய இரிடியம் பொருட்களுக்கு வீட்டில் வைத்து பூஜை செய்து வருகிறார். இதனால் அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி அவரின் வீட்டுக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அவர் சில பெண்களை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவர்களிடம் வீட்டில் உள்ள இரிடியம் சிலைக்கு நிர்வாண பூஜை நடத்தினால், அந்த சிலைக்கு சக்தி கிடைக்கும் என கூறுகிறார். இதன் மூலம் அதனை விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்.

இதையொட்டி பூஜைக்காக அவர் அழைத்து வரும் பெண்களுக்கு தீர்த்தம் கொடுக்கிறார். அதை வாங்கி குடிக்கும் அந்த பெண்கள் சுய நினைவை இழந்து விடுகின்றனர். பின்னர் அவர்களை நிர்வாணமாக்கி செல்போனில் படம் பிடித்து கொள்கிறார். இதையடுத்து அதை அவர்களிடம் காண்பித்து அடிக்கடி பூஜைக்கு வரவேண்டும் என்று மிரட்டுகிறார்.

என்னையும் அவர் நிர்வாண பூஜையில் ஈடுபடுத்த முயன்றார். ஆனால் நான் அதற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து அவரிடம், நான் பணம் வாங்கியதாக கூறி மிரட்டுகிறார். இதேபோல் நிர்வாண பூஜையில் பங்கேற்ற பெண்களிடமும் பணம் கேட்கிறார். கொடுக்கவில்லை என்றால் சமூக வலைத்தளத்தில் வீடியோவை பரப்பி விடுவேன் என்று கூறி அவர்களை மிரட்டி வருகிறார். இந்த சம்பவத்தால் நான் ஊரை காலி செய்துவிட்டு போகிறேன். விசாரணைக்கு அழைக்கும் போது வர தயாராக இருக்கிறேன். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story