குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் லாரி சிறைபிடிப்பு


குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் லாரி சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 7 July 2019 4:15 AM IST (Updated: 7 July 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் கொண்டு வந்த லாரி சிறைபிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளங்கள், ஆறுகள் எல்லாம் நீரின்றி வறண்டு கிடக்கிறது. நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தஞ்சை மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு திருமானூர் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுகள் மூலமும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மாநகராட்சியில் விரிவாக்க பகுதிகளில் சில இடங்களில் குடிநீர் பிரச்சினை நிலவினாலும் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் ஆழ்குழாய் கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 3 மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

லாரிகளில் குடிநீர் கொண்டு வரப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு வாரத்திற்கு ஒரு முறை வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவும் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் வயல்வெளியில் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மக்கள் தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. இந்தநிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தப்படுத்த கோரியும் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் நேற்றுகாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்தவித தீர்வும் ஏற்படவில்லை. இந்தநேரத்தில் தனியாருக்கு சொந்தமான லாரியில் குடிநீர் நிரப்பப்பட்டு விலைக்கு விற்பனை செய்வதற்காக திருக்கானூர்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. இதை பார்த்த மக்கள் அந்த லாரியை சிறைபிடித்து, நாங்கள் குடிநீருக்கு சிரமப்படும்போது கூடுதல் விலைக்காக விற்பனை செய்கிறீர்கள். குடிநீர் பிரச்சின தீரும் வரை எங்கள் ஊருக்குள் குடிநீர் லாரியை அனுமதிக்கமாட்டோம் என ஆவேசமாக கூறினர்.

உடனே போலீசார் அவர்களிடம் பேசி, லாரியை மீட்டு திருப்பி அனுப்பினர். இதையடுத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) கந்தசாமி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். இதைத்தொடர்ந்து 1 மணிநேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. லாரிகளில் குடிநீர் கொண்டு வரப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் கடந்த 1 ஆண்டாக சுத்தம் செய்யப்படவில்லை. தனியார் லாரிகள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு ஒரு குடம் குடிநீர் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. புதிதாக ஆழ்குழாய் போட்டு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை என்றால் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Next Story