ஊட்டி அருகே பிளாஸ்டிக் பொருட்களால் கால்வாயில் அடைப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


ஊட்டி அருகே பிளாஸ்டிக் பொருட்களால் கால்வாயில் அடைப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 July 2019 4:15 AM IST (Updated: 7 July 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே பிளாஸ்டிக் பொருட்களால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளது. ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தலைகுந்தா பகுதியில் கால்வாய்க்கு மேல்புறம் பாலம் ஒன்று இருக்கிறது. மழைக்காலத்தில் வனப்பகுதிகளில் உற்பத்தியாகும் தண்ணீர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் பாலத்தின் அடியில் செல்கிறது.

இதற்கிடையே பலத்த மழை பெய்யும் சமயத்தில் விவசாய விளைநிலங்களில் இருந்து மண் அடித்து வரப்பட்டு, பாலத்தின் அடியில் படிந்தது. நாளுக்குநாள் மண் அதிகமாக சேகரமானதால், கால்வாய் அளவு சுருங்கி விட்டது. கடந்த ஆண்டு மழையின் போது தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலையில் குளம்போல் தேங்கியதோடு, சாலை வெள்ளக்காடாவது வழக்கமாகி வருகிறது. இதனால் ஊட்டிக்கு வாகனங்களில் வருபவர்கள் தண்ணீரில் தத்தளித்தபடி செல்கிறார்கள். மேலும் தண்ணீர் வற்றும் வரை காத்திருந்து விட்டு புறப்படுகின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்கள்

இந்த நிலையில் தற்போது பாலத்தின் அடியில் மண் ஒருபுறம் படிந்து இருப்பதோடு, மற்றொரு புறம் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் தண்ணீல் செல்வதில் சிக்கலாகி அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் உணவருந்தி விட்டு பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்கின்றனர். மேலும் பொதுமக்கள் குப்பைகளை வெளியில் கொட்டி வருகிறார்கள். இதனால் இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

தலைகுந்தா பாலத்தின் கீழுள்ள கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் காமராஜ் சாகர் அணையில் கலக்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக தலைகுந்தா மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள வனப்பகுதிகள் உள்ளன. சமீபகாலமாக பிளாஸ்டிக் பொருட்கள் தூக்கி வீசப்படுவதால், பாலத்தின் அடிப்பகுதியே தெரியாத அளவுக்கு மண் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்து உள்ளது. அதன் காரணமாக பலத்த மழை பெய்தால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலைக்கு வந்துவிடும். இது தொடர்கதையாக நடந்து வருகிறது.

தூர்வார நடவடிக்கை

வனப்பகுதிகளையொட்டி கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வனவிலங்குகள் உண்ணும் போது, அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும். மழைநீர் கால்வாய்களை அடைத்து வெள்ளம் ஏற்பட பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகிறது. மேலும் மழைநீர் நிலத்தில் உட்புக தடையாகிறது. பிளாஸ்டிக் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. நீர் நிலைகளில் சூரிய ஒளி மற்றும் காற்று உட்புக அவை தடையாக உள்ளது. ஆகவே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மேலும் பாலத்தின் அடியில் படிந்து உள்ள மண்ணை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story