பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சியில் மண்ணுளி பாம்பு, ஆமைகளை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது


பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சியில் மண்ணுளி பாம்பு, ஆமைகளை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 7 July 2019 4:30 AM IST (Updated: 7 July 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சியில் மண்ணுளி பாம்பு, ஆமைகளை விற்பனை செய்ய முயன்றதாக 5 பேரை மாறுவேடத்தில் சென்று வனத்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சியில் நட்சத்திர ஆமை உள்பட 2 ஆமைகள் மற்றும் மண்ணுளி பாம்பை சிலர் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் வனச்சரகர் காசிலிங்கம், வனபாதுகாப்பு படை வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வனவர் பிரபாகரன் மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்றனர்.

மேலும் அவர்களை கையும், களவுமாக பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து வனத்துறையை சேர்ந்த ஒருவரை கேரள வியாபாரி போன்று, அங்கலகுறிச்சிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரிடம் ரூ.50 ஆயிரம் பணத்தையும் கொடுத்து அனுப்பினர். அங்கு இருந்தவர்கள் பணத்தை காண்பிக்குமாறு கூறினார்கள். இதையடுத்து அவர் கொண்டு சென்ற பணத்தை காண்பித்தார்.

அதை தொடர்ந்து அவரை மண்ணுளி பாம்பு, ஆமைகள் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது மறைந்திருந்த வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி கைது செய்தனர். மேலும் அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அங்கலகுறிச்சியை சேர்ந்த சம்பத் (வயது 23), வால்பாறையை சேர்ந்த கண்ணன் (42), நந்தகுமார் (25), அமிர்தராஜ் (27), செல்லத்துரை (49) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

மேலும் ஆமைகளை பழனியில் இருந்து ஒருவரிடம் வாங்கி வந்ததாகவும், மண்ணுளி பாம்பை வனப்பகுதியில் பிடித்ததும் தெரியவந்தது. மண்ணுளி பாம்பு, ஆமைகள் மருந்துக்கு பயன்படுவதாக கூறி மோசடி செய்து வந்துள்ளனர். மேலும் மண்ணுளி பாம்பை ரூ.4 லட்சம் வரை விற்பனை செய்ய விலை பேசி வந்ததும் தெரிந்தது.

இவர்கள் இதைபோன்று வேறு யாரிடமும் மோசடி செய்தார்களா? அதன் மூலம் கிடைத்த பணம் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். கைதான 5 பேருக்கும் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து உத்தரவின் பேரில் ஒரு நபருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 5 பேரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளில் ஒன்று நட்சத்திர ஆமையாகும். அதில் ஒரு ஆமை தண்ணீரிலும், மற்றொரு ஆமை நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது. இதுபோன்ற யாராவது மண்ணுளி பாம்பு, ஆமைகளை வைத்து மோசடி செய்தால் வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மோசடி நபர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story