வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலி
காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலியானார்கள்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த ராஜாகுளிப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மனைவி செந்தாமரை (வயது43). இவர் நேற்று தனது வீட்டின் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செந்தாமரை பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்திரமேரூர் அருகே சிறுதாமூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (46), இவர் மறைமலைநகரில் டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் பிடிப்பதற்காக சாலையில் நடந்து செல்லும்போது திடீரென பின்னால் வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் அன்பழகன் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் காரை கிராமத்தை சேர்ந்தவர் பாலு (42). இவர் தனது மோட்டார்சைக்கிளில் நீர்வள்ளூரில் இருந்து காரை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாலு வந்த மோட்டார்சைக்கிள் நிலைத்தடுமாறி சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். இவர் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூரை அடுத்த காக்களூருக்கு வேலையின் காரணமாக சென்றார். பின்னர் அவர் மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருவள்ளூரை அடுத்த தொழுவூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பாலமுருகன் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.