விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் உலக தமிழர் பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம்


விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் உலக தமிழர் பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 8 July 2019 3:30 AM IST (Updated: 8 July 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மத்தியஅரசு நீக்க வேண்டும் என உலக தமிழர் பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை 10-ம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது. நிறைவு நாளான நேற்றுகாலை கருத்தரங்கம் நடைபெற்றது. மாலையில் பொது அரங்கம் நடைபெற்றது.

இதற்கு உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் ஈழ தமிழர்களின் உரிமைகளை காக்கவும், அவர்கள் விடுதலை பெறவும் போராடி வருகின்ற அமைப்பாகும். ஆனால் இந்த அமைப்பின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் மத்தியஅரசு பழி சுமத்தி தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் உள்பட உலக நாடுகள் பலவும் விடுதலை புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டன. மத்தியஅரசு அந்த தடையை நீட்டித்திருப்பதை இந்தமாநாடு வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்த தடையை நீக்க வேண்டும்.

இலங்கையில் போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆகியும் ஈழ தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. சொந்த ஊர்களுக்கோ, வீடுகளுக்கோ அவர்கள் திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது. தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழின அழிப்பு தொடர்கிறது. ஈழ தமிழர்களின் எதிர்காலம் குறித்து இலங்கையிலும் மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் வாழ்கின்ற ஈழ தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்களின் விருப்பத்திற்கு இணங்க அரசியல் ரீதியான தீர்வினை காண்பதற்கு ஐ.நா.பேரவை முன்வர வேண்டும்.

இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையை பன்னாட்டு செஞ்சிலுவை சங்கம் உடனடியாக மேற்கொண்டு அவர்கள் குறித்த நிலைமையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். உயிரோடு இருப்பவர்களை மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முன்வர வேண்டும்.

இலங்கையில் வாழும் தமிழர்களை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் இனஅழிப்பு நடவடிக்கைகளில் சிங்களஅரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சர்வதேச சட்டத்திற்கிணங்க இனஅழிப்பு என்பது தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். 1948-ம் ஆண்டு இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை சிங்களர் கையில் ஒப்படைத்துவிட்டு பிரிட்டன் வெளியேறிய நாள் முதல் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பை தொடர்ந்து சிங்களஅரசு செய்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பும், நீங்காத கடமையும் ஐ.நா. சபைக்கு உண்டு. அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு கதறி கொண்டிருக்கும் ஈழ தமிழர்களை காப்பாற்ற ஐ.நா.சபை முன்வர வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story