நீட் தேர்வு பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் திருமாவளவன் பேட்டி


நீட் தேர்வு பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 7 July 2019 10:45 PM GMT (Updated: 7 July 2019 7:47 PM GMT)

நீட் தேர்வு பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் திருமாவளவன் பேட்டி.

பெரம்பலூர்,

அரசு ஊழியர்களின் ஐக்கிய பேரவையின் முப்பெரும் விழா பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போய், தற்போது உயிரோடு மீட்கப்பட்டு போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது ஆறுதல் அளிக்கிறது. முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளித்து, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானங்களை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக மத்திய அரசு ஐகோர்ட்டில் பதில் கூறியிருக்கிறது. இது தமிழ்நாட்டின் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. மத்திய அரசின் இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மீண்டும் தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைக்க முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன். இதை பற்றி நான் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன். நீட் தேர்வு பிரச்சினையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் கட்சி பாகுபாடுகள் இன்றி அனைவரும் ஒருமித்த குரலில் பேசிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஒரு மித்த குரலில் பேசுவோம் என்றார்.

Next Story