விளையாட்டு விடுதிகளில் 2-ம் கட்டமாக மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


விளையாட்டு விடுதிகளில் 2-ம் கட்டமாக மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 July 2019 4:30 AM IST (Updated: 8 July 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு விடுதி களில் 2-ம் கட்ட மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

விளையாட்டு விடுதிகளில் உள்ள 7-ம் வகுப்பு மாணவர்கள் டேக்வாண்டோ, 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கிரிக்கெட், கால்பந்து, ஆக்கி, கைப்பந்து, ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது.

2-ம் கட்டம்

2019-20-ம் ஆண்டிற்கு விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு 2-ம் கட்ட மாணவ, மாணவிகளுக்கு கீழ்க்காணும் விளையாட்டுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது. மேற்கண்ட விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டு உள்ள மாணவ, மாணவிகள் சேர்க்கைக்குரிய படிவங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து இன்று (திங்கட் கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விளையாட்டு விடுதிகள் தொடர்பான விவரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

மாநில அளவிலான 2-ம் கட்ட தேர்வுகள் வருகிற 9-ந் தேதி காலை 8 மணிக்கு சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் தடகளம் மற்றும் கால்பந்து, சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் இறகுப்பந்து, டேக்வாண்டோ, கைப்பந்து மற்றும் ஸ்குவாஷ், சென்னை அசோக் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் மற்றும் சென்னை எலும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story