காஞ்சீபுரத்தில் மஞ்சள் பட்டாடையில் அத்திவரதர் ஒரே நாளில் 92 ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர்


காஞ்சீபுரத்தில் மஞ்சள் பட்டாடையில் அத்திவரதர் ஒரே நாளில் 92 ஆயிரம் பக்தர்கள்  குவிந்தனர்
x
தினத்தந்தி 8 July 2019 3:29 AM IST (Updated: 8 July 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் நேற்று 7-வது நாளில் மஞ்சள் நிற பட்டாடையில் காட்சி அளித்தார். நேற்று ஒரே நாளில் 92 ஆயிரம் பக்தர்கள் அவரை தரிசித்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் கடந்த 1-ந்தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 7-வது நாளான நேற்று மஞ்சள் நிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலை சுற்றியுள்ள அனைத்து குளிர்பான கடைகளிலும் ½ லிட்டர் காலி வாட்டர் பாட்டில்களில் சுத்்திகரிக்கப்படாத தண்ணீரை நிரப்பி மினரல் வாட்டர் என்று விற்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் தலையிட்டு அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தினால் இதை தடுக்கலாம் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அறிஞர் அண்ணா நினைவு இல்லம் பகுதியில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் திருவிழாவான நேற்று ஒரே நாளில் மட்டும் 92 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க குவிந்தனர்.

அத்திவரதரை தரிசிக்க வரும் வி.ஐ.பி. தரிசனத்தில் போலீசாரின் உறவினர்களுக்கு மட்டும் பாஸ் இல்லாமல் தினமும் அத்திவரதரை தரிசிக்க சுமார் 50-க்கும் மேற்பட்டோரை அனுப்பி வருகின்றனர்.

காஞ்சீபுரம் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பக்தவச்சலு. தற்போது அவருக்கு 85 வயது ஆகிறது, இவர் 3-வது முறையாக அத்திவரதரரை தரிசனம் செய்துள்ளார். கடந்த 1939- ஆம் ஆண்டு தனது 5-வது வயதிலும், 1979-ஆம் ஆண்டு 2-வது முறையும், தற்போது 3-வது முறையும் அத்திவரதரை தரிசித்தார். அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்தனர்.

இவரது தந்தை நாராயணசாமியும் கடந்த 1899, 1939 மற்றும் 1979 என 3 முறை அத்திவரதரை தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story