ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு முதல்-அமைச்சர் அழைக்க வேண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மாயவன் பேட்டி


ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு முதல்-அமைச்சர் அழைக்க வேண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மாயவன் பேட்டி
x
தினத்தந்தி 8 July 2019 4:05 AM IST (Updated: 8 July 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்தார்.

சென்னை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்ட குழு நிர்வாகிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலக வளாகத்தில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், மீனாட்சி சுந்தரம், வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினர்.

முன்னதாக ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜாக்டோ-ஜியோ சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், சமீபத்தில் நாங்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம், மறியல் போராட்டங்களின் காரணமாக தமிழக அரசால் பழிவாங்கப்பட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள பழிவாங்குதல் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முதல்கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேச வேண்டும். கடந்த 1½ ஆண்டுகளாக எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். இதற்கு செவிசாய்த்து எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாத நாதியற்ற அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. இனியும் நாங்கள் பொறுத்துக் கொள்ள போவதில்லை.

எனவே உடனடியாக எங்களை அழைத்து பேச வேண்டும். எங்களை அழைத்து பேச மறுத்தால் நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்கள் எப்படி உங்களுக்கு இல்லாமல் போனதோ? அதே போன்று சட்டசபை தேர்தலின் போது 234 இடங்களும் உங்களுக்கு இல்லாமல் போகும். சட்டமன்றத்தில் நீங்கள் (அ.தி.மு.க. அரசு) ஜீரோவாகும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story