பர்கூர், தாளவாடி பகுதியில் யானை தூக்கி வீசியதில் 2 பேர் படுகாயம்
பர்கூர், தாளவாடி பகுதியில் யானை தூக்கி வீசியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஒசூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன் (வயது 31). விவசாயி. இவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இவற்றை மாதேவன் நேற்று முன்தினம் காலை மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார். மாலையில் மேய்ச்சலுக்கு பிறகு மாடுகளை வீட்டுக்கு ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாடுகள் கத்தியபடி சிதறி ஓடின. இதனால் மாதேவன் முன்னால் சென்று பார்த்தார்.
அப்போது அங்கு ஒரு யானை நின்று கொண்டிருந்தது. இதனால் மாதேவன் அதிர்ச்சி அடைந்தார். உடனே பயந்து அங்கிருந்து ஓடினார். அவரை யானை துரத்தி சென்று துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அங்கிருந்து யானை சென்றுவிட்டது. இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் மாதேவனை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி அறிந்ததும் பர்கூர் வனத்துறையினர் அங்கு சென்று மாதேவனை பார்வையிட்டனர்.
இதேபோல் தாளவாடி பகுதியில் முதியவர் ஒருவரை யானை தூக்கி வீசியது. அதன் விவரம் வருமாறு:–
தாளவாடி அருகே நெய்தாளபுரம் பகுதியை சேர்ந்தவர் சென் மல்லப்பா (75). தொழிலாளி. இவருடைய மனைவி மாதேவம்மா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்தநிலையில் சென் மல்லப்பாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் அவரை தாளவாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக நேற்று அவருடைய உறவினர்கள் ரவிக்குமார், முத்தப்பா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றனர். நெய்தாளபுரம் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி வழியாக அவர்கள் 3 பேரும் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக யானை ஒன்று அவர்களை நோக்கி வேகமாக வருவதை கண்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, ஓட்டம் பிடித்தனர். இதில் ரவிக்குமாரும், முத்தப்பாவும் வேகமாக ஓடிவிட்டனர். முதியவர் சென் மல்லப்பா மட்டும் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த யானை, அவரை துதிக்கையால் பிடித்து புதருக்குள் வீசியது. பின்னர் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
சிறிது நேரம் கழித்து முத்தப்பாவும், ரவிக்குமாரும் அங்கு சென்றனர். அப்போது படுகாயம் அடைந்து கிடந்த சென் மல்லப்பாவை மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள சிகிச்சை அளித்து வருகிறார்கள்.