கூடலூர், பந்தலூர் தாலுகாவில், வாழை, இஞ்சி, மரவள்ளிக்கிழங்குக்கு பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் - அதிகாரி தகவல்
கூடலூர், பந்தலூர் தாலுகாவில் வாழை, இஞ்சி, மரவள்ளிக்கிழங்குக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார். கூடலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கூடலூர்,
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் நடப்பு ஆண்டு காரீப்பட்டத்துக்கான பயிர் காப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தொடர் மழை, வறட்சி, ஆலங்கட்டி மழை, மண் அரிப்பு உள்பட பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் வாழை, இஞ்சி, மரவள்ளிக்கிழங்குக்கு காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கூடலூர், ஓவேலி, தேவாலா, பாடந்தொரை, முதுமலை, செருமுள்ளி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை, மூனனாடு, நெல்லியாளம், எருமாடு மற்றும் சேரங்கோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த வாழை விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.4,400 தவணை முறையில் செலுத்தி, ரூ.88 ஆயிரம் காப்பீடு தொகையாக பெறலாம்.
இதேபோன்று செருமுள்ளி, ஸ்ரீமதுரை, கூடலூர், ஓவேலி, சேரங்கோடு, எருமாடு, மூனனாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த இஞ்சி விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.4,235 தவணை முறையில் செலுத்தி ரூ.84 ஆயிரத்து 700 காப்பீடு தொகையாக பெறலாம். கூடலூர், ஓவேலி, தேவாலா, பாடந்தொரை, முதுமலை, செருமுள்ளி, ஸ்ரீமதுரை, நெலாக்கோட்டை, மூனனாடு, எருமாடு, சேரங்கோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.1,695 தவணை முறையில் செலுத்தி ரூ.33 ஆயிரத்து 900 காப்பீடு தொகையாக பெறலாம்.
பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்ப படிவத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார், சிட்டா மற்றும் அடங்கல் நகல்கள், வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் தவணை தொகையை பொதுசேவை மையத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் வழங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story