கேரளாவில் தென்மேற்கு பருவ மழை 46 சதவீதம் குறைவு; மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்


கேரளாவில் தென்மேற்கு பருவ மழை 46 சதவீதம் குறைவு; மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
x
தினத்தந்தி 8 July 2019 5:48 AM IST (Updated: 8 July 2019 5:48 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை 46 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அதனால் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்பட 5 மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.

மதுரை,

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணையை நம்பித்தான் உள்ளன. கடந்த ஆண்டு கேரளாவில் நல்ல மழை பெய்தது. இதனால் பல முறை முல்லை பெரியாறு அணை தனது முழு அளவை எட்டியது. முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் வைகை அணைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 5 மாவட்டங்களின் குடிநீர் தேவையும், விவசாய தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் கேரளாவில் ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கி விடும். ஆனால் இந்தஆண்டு 8-ந் தேதிக்கு மேல் தாமதமாக தான் தொடங்கியது. நல்ல மழையும் பெய்ய வில்லை. அதாவது ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 6-ந் தேதி வரை கேரளாவில் சராசரியாக 799 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் இந்த காலகட்டத்தில் வெறும் 435 மில்லி மீட்டர் மழை தான் பெய்து உள்ளது. 46 சதவீதம் குறைவாக மழை கிடைத்து இருக்கிறது.

அதிலும் பெரியாறு அணை உள்ள இடுக்கி மாவட்டத்தில் 947 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 424 மில்லி மீட்டர் மழை தான் பெய்து இருக்கிறது. இங்கு 55 சதவீதம் குறைவான மழை பெய்திருக்கிறது.

கேரளாவில் மழை குறைந்து போனதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து இல்லாமல் போய் விட்டது. அணையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 142 அடி வரை நீர் தேக்கலாம். ஆனால் அணையின் கட்டுமான அமைப்புப்படி 100 அடிக்கு மேல் இருக்கும் தண்ணீரை மட்டுமே தமிழகம் எடுக்க முடியும். நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் வெறும் 112.40 அடியாக உள்ளது. எனவே அங்கிருந்து வைகை அணைக்கு நீர்வரத்து இல்லாமல் உள்ளது.

வைகை அணையின் முழு கொள்ளளவு 72 அடியாகும். ஆனால் தற்போது 29.69 அடி நீர் இருப்புதான் உள்ளது. இந்த நீர் தான் மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. பொதுவாக கேரளாவில் பெய்யும் மழை மூலம் ஜூன், ஜூலையில் வைகை அணை வேகமாக நிரம்பும்.

ஆனால் இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதே நிலை நீடித்தால் மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு தமிழகத்தில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவ மழை ஏமாற்றி விட்டது. இருப்பினும் கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவ மழை காரணமாக முல்லை பெரியாறு அணையும், வைகை அணையும் நிரம்பின. இதனால் மதுரை உள்பட 5 மாவட்ட பாசனத்திற்கும், குடிநீருக்கும் பிரச்சினை இல்லாமல் இருந்தது.

கடந்தாண்டு தென்மேற்கு பருவ மழையின் போது சேமிக்கப்பட்ட தண்ணீர் தான் தற்போது வரை வைகை அணையில் உள்ளது. ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் சராசரி அளவை விட மழை மிக குறைவாக பெய்து உள்ளது. இனி வரும் நாட்களில் நல்ல மழை பெய்ய வேண்டும்.

இல்லையென்றால் வைகை வறண்டு 5 மாவட்டங்களும் வரும் நாட்களில் மிகப்பெரும் குடிநீர் பஞ்சத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்தால்தான் ஓரளவுக்கு நிலைமையை சமாளிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story