கொன்று புதைக்கப்பட்ட காவலாளி உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை மனைவி, மாமனார் கைது


கொன்று புதைக்கப்பட்ட காவலாளி உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை மனைவி, மாமனார் கைது
x
தினத்தந்தி 9 July 2019 4:45 AM IST (Updated: 8 July 2019 11:56 PM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே கொன்று புதைக்கப்பட்ட காவலாளியின் உடலை போலீசார் தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் காவலாளியின் மனைவி மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திருவையாறு,

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி காட்டூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் முனியப்பன்(வயது 35). இவர், தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ஒக்கக்குடியை சேர்ந்த தனது தாய் மாமன் பழனிசாமியின்(50) மகள் மாரியம்மாளை(25) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2½ வயதில் நானி என்ற மகன் உள்ளான்.

முனியப்பன், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஆற்றங்கரை காவலாளியாக(லஸ்கர்) பணிபுரிந்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாரியம்மாள் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். முனியப்பன் மனைவியை பார்ப்பதற்காக மாமனார் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். வழக்கம்போல் கடந்த மாதம் 21-ந் தேதி முனியப்பன், மாமனார் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு அவர் மாயமாகி விட்டார். வேலைக்கும் வராததால் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து முனியப்பனை தேடி உள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருவையாறு தனிப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறின்போது முனியப்பன் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுதொடர்பாக திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனின் மனைவி மாரியம்மாள், மாமனார் பழனிசாமி உள்ளிட்டோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

மாரியம்மாளின் அண்ணன் சமீபத்தில் இறந்து விட்டார். அவருடைய இறுதி சடங்கிற்கு முனியப்பன் செல்லவில்லை என தெரிகிறது. இதுகுறித்து கடந்த மாதம் 21-ந் தேதி ஒக்கக்குடிக்கு சென்ற முனியப்பனிடம், மாரியம்மாள் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த மாரியம்மாள் மற்றும் அவருடைய தந்தை பழனிசாமி ஆகியோர் சேர்ந்து முனியப்பனை சரமாரியாக தாக்கி கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்து உள்ளனர். பின்னர் உடலை மண்எண்ணெய் ஊற்றி எரித்து விட்டு, வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்து உள்ளனர். புதைக்கப்பட்ட இடம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அந்த இடத்தில் விறகுகளை அடுக்கி வைத்துள்ளனர்.

இதை திருவையாறு உட்கோட்ட தனிப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையின்போது மாரியம்மாள், பழனிசாமி ஆகியோர் ஒப்புக்கொண்டனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

இதனையடுத்து முனியப்பனின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் நேற்று முன்தினம் கண்டறிந்தனர். அங்கு தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று திருவையாறு தாசில்தார் இளம்மாருதி, திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் முன்னிலையில் முனியப்பனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது விசாரணைக்காக முனியப்பன் மனைவி மாரியம்மாளை போலீசார் அங்கு அழைத்து வந்தனர்.

பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் உதயபானு தலைமையில் டாக்டர்கள் முனியப்பன் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றங்கரை அருகே முனியப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக முனியப்பன் மனைவி மாரியம்மாள், மாமனார் பழனிசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

குடும்ப தகராறில் தந்தையுடன் சேர்ந்து மனைவியே கணவரை கொன்று புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story