கும்மிடிப்பூண்டியில் வீட்டின் கதவை உடைத்து 70 பவுன் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கும்மிடிப்பூண்டியில் வீட்டின் கதவை உடைத்து 70 பவுன் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 July 2019 3:45 AM IST (Updated: 9 July 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 70 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ள ஓபசமுத்திரத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன் (வயது 37). இவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கண்ணாடிகளுக்கான பூ வேலைபாடுகளை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, நேற்று முன்தினம் (ஞாயிறுக்கிழமை) இரவு 9 மணியளவில் வெங்கடேசன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு கோவில் திருவிழாவிற்கு சென்றார். பின்னர் இரவு 10 மணியளவில் அவரும், அவரது குடும்பத்தினரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

அப்போது முன்பக்க கதவின் பூட்டை திறந்து வீட்டிற்குள் சென்று வெங்கடேசன் பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு கடப்பாரை கொண்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே வீட்டின் தனியறையில் சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 70 பவுன் நகைகள் 2 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 32 ஆயிரம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் தலைமையிலான போலீசார் நேரில் ஆய்வு செய்தார். தடயவியல் நிபுணர்கள் கைரேகை தடயங்களை சேகரித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் பின்பக்கம் உள்ள சவுக்கு தோப்பு வழியாக வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு அதே வழியாக மர்ம கும்பல் தப்பி சென்றதும், வெங்கடேசன் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று உடனடியாக வீடு திரும்பி விடுவார்கள் என்பதை நன்கு அறிந்த நிலையில் குறிப்பிட்ட 1 மணி நேரத்தில் திட்டமிட்டு இந்த திருட்டில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிவந்து உள்ளது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் (பொறுப்பு) தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகளை அமைத்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story