மாயமாகி நடுக்கடலில் தத்தளித்த பாம்பன் மீனவர்கள் 2 பேர் உயிருடன் மீட்பு; மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம்


மாயமாகி நடுக்கடலில் தத்தளித்த பாம்பன் மீனவர்கள் 2 பேர் உயிருடன் மீட்பு; மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 9 July 2019 4:45 AM IST (Updated: 9 July 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடிக்க சென்று மாயமாகி நடுக்கடலில் தத்தளித்த பாம்பனை சேர்ந்த மீனவர்கள் 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் 2 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து கடந்த 4–ந் தேதி ஒரு பைபர் படகில் ஸ்டிபன், அந்தோணி, வினோன், சிந்தா ஆகிய மீனவர்களும் வடக்கு கடலான பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் 5–ந் தேதி அன்று கரை திரும்ப வேண்டும். ஆனால் 4 நாட்களாகியும் கரை திரும்பவில்லை. மாயமான 4 மீனவர்களை பாம்பனை சேர்ந்த 7 நாட்டுப் படகில் 50 மீனவர்கள் கடலுக்குள் தேடி சென்றனர். இதுதவிர மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்திற்கு சொந்தமான 2 ஹோவர் கிராப்ட் கப்பல்களில் கடலோர காவல் படையினரும், உச்சிப்புளியில் உள்ள பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் ஒன்றும் பாம்பன் முதல் தொண்டி, கோடியக்கரை மற்றும் இந்திய கடல் எல்லை வரையிலான கடல் பகுதியில் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து நேற்றுமுன்தினம் ஒரு பைபர் படகில் செங்கமுத்து, ராசப்பா, ராசா, பரதன், ராமமூர்த்தி ஆகிய 5 மீனவர்களும் பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது நேற்று காலை 8 மணியளவில் நடுக்கடலில் உயிருக்கு போராடிய நிலையில் கடலில் தத்தளித்த பாம்பனை சேர்ந்த அந்தோணி, ஸ்டிபன் ஆகிய 2 மீனவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்து மணமேல்குடியில் உள்ள அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 2 மீனவர்களுக்கும் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி 2 மீனவர்களை மீட்ட 5 மீனவர்களில் ஒருவரான செங்கமுத்து கூறியதாவது:–

ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து ஒரு பைபர் படகில் 5 பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றோம்.கரையில் இருந்து சுமார் 20 நாட்டிக்கல்மைல் தொலைவில் படகு கவிழ்ந்த நிலையில் அதில் ஏறி அமர்ந்து கயிற்றை பிடித்த நிலையில் தத்தளித்து கொண்டிருந்த 2 மீனவர்களை மீட்டு குடிக்க தண்ணீர் மற்றும் சாப்பாடு கொடுத்து கரைக்கு கொண்டு வந்து மணமேல்குடி அரசு மருத்தவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தோம். அவர்களுடன் வந்த 2 மீனவர்கள் கடலில் மூழ்கி விட்டதாக எங்களிடம் தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரை சந்திக்க கலெக்டர் வீரராகவராவ் பாம்பனுக்கு வருகை தந்து மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:–

2 மீனவர்களையும் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். சிந்தா, வினோன் ஆகிய 2 மீனவர்களையும் தொண்டி–ஜெகதாபட்டினத்திற்கு இடைப்பட்ட கடல் பகுதியில் இந்தியகடலோரகாவல்படையினர் கப்பல் மூலமாகவும், கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலமாகவும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை மற்ற 2 மீனவர்களை பற்றியும் எந்த ஒரு தகவலும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 2 மீனவர்கள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் சென்ற மேலும் 2 மீனவர்களை பற்றி எந்த தகவலும் இல்லாததால் அந்த மீனவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் தவித்து வருகின்றனர்.


Next Story