மாவட்ட செய்திகள்

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஊட்டியில் 20 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். - ரூ.5 செலுத்தினால் ஒரு லிட்டர் தண்ணீர் கிடைக்கும் + "||" + Chennai High Court directive, 20 places in Ooty Drinking Water ATM

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஊட்டியில் 20 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். - ரூ.5 செலுத்தினால் ஒரு லிட்டர் தண்ணீர் கிடைக்கும்

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஊட்டியில் 20 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். - ரூ.5 செலுத்தினால் ஒரு லிட்டர் தண்ணீர் கிடைக்கும்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஊட்டியில் 20 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ரூ.5 நாணயத்தை செலுத்தினால் ஒரு லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை ஐகோர்ட்டு கடந்த மே மாதம் 29-ந் தேதி வெளியிட்ட உத்தரவில், நீலகிரியில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு உள்ள குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்கள், வணிகர் சங்கங்கள், வியாபார சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்தும் விதத்தில், அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட எல்லைகளில் அமைந்து உள்ள பர்லியார், குஞ்சப்பனை, கக்கனல்லா, நாடுகாணி, தாளூர், சோளாடி, பாட்டவயல், நம்பியார் குன்னு, கெத்தை உள்பட அனைத்து சோதனைச்சாவடிகள் (மாவட்டத்தின் நுழைவுவாயில்) முதல் ஊட்டி வரையிலான நெடுஞ்சாலைகளில் அமைந்து உள்ள அனைத்து கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள், வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினம் முதல் தடை விதிக்கப்பட உள்ளது.

இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், மறுசுழற்சி செய்யக்கூடிய பாட்டில்கள் மற்றும் கேன்களை குடிநீர் பாட்டில்களுக்கு மாற்று பொருளாக பயன்படுத்தவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தின் நெடுஞ்சாலைகள், சுற்றுலா தலங்கள், பொது இடங்களில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கும் பொருட்டு, சுத்திகரிக்கும் குடிநீர் எந்திரங்களை தற்போது பொருத்தவும், அடுத்த கட்டமாக அனைத்து இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யவும் முடிவு எடுக்கப் பட்டது.

இந்த நிலையில் வருகிற சுதந்திர தினம் முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், விற்க மற்றும் பயன்படுத்த தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில், முதல் கட்டமாக குடிநீர் ஏ.டி.எம். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா முன்பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நகராட்சி மூலம் ரூ.1½ லட்சம் செலவில் குடிநீர் ஏ.டி.எம். அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

குடிநீரை சுத்திகரித்து வழங்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான எந்திரம் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. குடிநீர் ஏ.டி.எம். நடைபாதையில் அமைக்கப்படுவதோடு, அதன் மேல்பகுதியில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி பொருத்தப்பட்டு உள்ளது. குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஐந்து ரூபாய் நாணயத்தை செலுத்தினால், ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்துக்கொள்ளலாம்.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, முதல் கட்டமாக ஊட்டியில் பிளாஸ்டிக் பாட்டில்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடிநீர் கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில், குடிநீர் ஏ.டி.எம். அமைக்கப்படுகிறது. மேலும் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊட்டி நகரில் முக்கியமான 20 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.