சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் கால்வாய் தண்ணீரில் பிணத்தை தூக்கி சென்ற கிராம மக்கள்


சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் கால்வாய் தண்ணீரில் பிணத்தை தூக்கி சென்ற கிராம மக்கள்
x
தினத்தந்தி 10 July 2019 4:15 AM IST (Updated: 10 July 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் கால்வாய் தண்ணீரில் பிணத்தை கிராம மக்கள் தூக்கி சென்றனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா செல்லம்பட்டி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு முக்கிய அடிப்படை வசதியான சுடுகாடு தேவைப்பட்டது. அவர்களில் யாராவது உயிரிழந்தால் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் புதைப்பது வழக்கமாக கொண்டிருந்தனர்.

தற்போது தங்களுக்கு தனி சுடுகாடு தேவை என தெரிவித்து கடந்த 2 வருடங்களுக்கு முன் செல்லம்பட்டி கூட்ரோடு பகுதியில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர், போச்சம்பள்ளி தாசில்தார், நாகரசம்பட்டி போலீசார் ஆகியோர் நேரில் சென்று கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் 25 சென்ட் நிலம் சுடுகாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தை கிராமமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இதனிடையே சுடுகாட்டிற்கு பாதை வசதி இல்லாததால் கால்வாயை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் ஒரு சிறு பாலம் கட்டித்தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை பாலம் அமைத்து கொடுக்க முன்வரவில்லை. இதனால் கிராமமக்கள் யாராவது இறந்தால் அவர்களது உடலை கால்வாயில் ஓடும் தண்ணீரில் நடந்து சென்று புதைக்க வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது50) என்பவர் உடல் நலம் குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு எடுத்து சென்ற போது கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் கிராமமக்கள் கால்வாயில் செல்லும் தண்ணீரில் இறந்தவரின் உடலை தூக்கி சென்று அடக்கம் செய்தனர். ஆனாலும் பெண்களும், குழந்தைகளும் சடங்கு செய்ய முடியாமல் தவித்தனர். எனவே சுடுகாடு செல்லும் வழியில் உள்ள கால்வாயை கடந்து செல்ல சிறு மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story