குமுளி பஸ் நிறுத்தத்தில், அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
குமுளி பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கூடலூர்,
கூடலூர் நகராட்சி 21-வது வார்டில் குமுளி உள்ளது. இங்கு பஸ் நி்லையம் கிடையாது. இதனால் அனைத்து பஸ்களையும் சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை கம்பத்தில் இருந்து குமுளிக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் இருந்து பயணிகளை இறக்கிவிட்ட டிரைவர், பஸ்சை திருப்புவதற்காக பின்னோக்கி நகர்த்தினார். அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர், பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து லோயேர்கேம்ப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானவர், கேரள மாநிலம் குமுளி அம்பாடி காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி அய்யப்பன் (வயது 55) என்று தெரியவந்தது.
இந்த விபத்து குறித்து பாலகுருநாதபுரத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஜெயக்குமார் (41) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story