பாபநாசம் காவலர் குடியிருப்பில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


பாபநாசம் காவலர் குடியிருப்பில் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 July 2019 4:45 AM IST (Updated: 10 July 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் காவலர் குடியிருப்பில் தூக்குப்போட்டு போலீஸ் காரர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் கீழ நெடார் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் பிரபு(வயது 37). இவர் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநீலக்குடி போலீஸ் நிலையத்துக்கு பிரபு இடமாற்றம் செய்யப்பட்டார்.

பாபநாசம் போலீஸ் குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த பிரபு கடந்த ஒரு வாரமாக விடுமுறையில் இருந்தார். நேற்று வீட்டில் பிரபு தனது மனைவி இலக்கியாவுடன் இருந்தார். இந்த நிலையில் பள்ளிக்கு சென்றிருந்த தனது மகனை அழைத்து வர இலக்கியா மாலை சுமார் 3 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

சுமார் 30 நிமிடங்கள் கழித்து பள்ளியில் இருந்து மகனுடன் வந்த இலக்கியா வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் மின்விசிறியில் பிரபு தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இலக்கியா கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மின்விசிறியில் இருந்து பிரபுவை கீழே இறக்கி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரபு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிரபு ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த போலீசார், பிரபுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story