நாகை தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு “சீல்” வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை


நாகை தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு “சீல்” வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 July 2019 4:30 AM IST (Updated: 10 July 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

நாகை தனியார் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை அபிராமி அம்மன் சன்னதிதெருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 23-ந் தேதி தலைஞாயிறு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு தாய் இறந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, கண்ணாடிகளை உடைத்தனர். மேலும் மருத்துவமனை மீது கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஆகியோருக்கு புகார்கள் வந்தன.

“சீல்” வைப்பு

அதன்பேரில் நேற்று சுகாதார பணிகள் இணை இயக்குனர் மகேந்திரன், தேசிய சுகாதார திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் டாக்டர்கள் மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மருத்துவமனையில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்று கண்டறியும் ஸ்கேன் கருவி இருப்பதும், இதுதொடர்பான பதிவேடுகள், படிவங்கள் ஏதும் இல்லாததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் “சீல்” வைத்தனர்.

Next Story