வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஆம்னி பஸ்சை திருடியவர் கைது


வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஆம்னி பஸ்சை திருடியவர் கைது
x
தினத்தந்தி 10 July 2019 11:00 PM GMT (Updated: 10 July 2019 8:48 PM GMT)

திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஆம்னி பஸ்சை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சியில் சாலை வரி கட்டாமல் இயக்கப்பட்டு வந்த ஆம்னி பஸ் ஒன்றை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து, திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி இருந்தனர்.

கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அன்று இரவு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஆம்னி பஸ்சை திருடி சென்றனர்.

இது குறித்து கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருட்டு போன ஆம்னி பஸ்சை தேடி வந்தனர்.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் அந்த ஆம்னி பஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பஸ்சை மீட்டு போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுயம்பு(வயது 40) என்பவர் தான் அந்த பஸ்சை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுயம்புவை கைது செய்தனர். 

Next Story