லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காண நாளைக்குள் விருப்பம் தெரிவிக்க வேண்டும் நீதிபதிகள் அறிவிப்பு


லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காண நாளைக்குள் விருப்பம் தெரிவிக்க வேண்டும் நீதிபதிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 July 2019 3:45 AM IST (Updated: 11 July 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

லோக் அதாலத் மூலம் வழக்குகளை தீர்வுகாண நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) விருப்பம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான (பொறுப்பு) கோமதிநாயகம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ராபின்சன் ஜார்ஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுரைப்படி நாளை மறுநாள் (சனிக்கிழமை) குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் மாவட்ட மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் 12 அமர்வுகளில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதன்மூலம் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக்கொள்ள வழிவகை செய்கிறது.

மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மற்றும் ஒரு உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடைபெறும். இந்த மக்கள் நீதிமன்றத்தில் விபத்துகளில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகள், மின்சார பயன்பாடு, வீட்டுவரி, தண்ணீர் வரி, காசோலைமோசடி, மணவிலக்கு தவிர்த்த குடும்பநல வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

விருப்பத்தை தெரிவிக்கலாம்

மக்கள் நீதிமன்றங்கள், இழப்பீட்டுத் தொகை, பிற பிரச்சினைகளில் இருதரப்பினர் சம்மதத்துடன் விரைவில் வழக்கை தீர்க்க வழிவகை செய்கின்றது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சம்பந்தமாக வழக்காடுபவர்களோ, அவர்களின் சார்பில் வக்கீல்களோ 12-ந் தேதிக்குள் (அதாவது நாளைக்குள்) செயலாளர், குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடம், மாவட்ட கோர்ட்டு வளாகம், நாகர்கோவில்- 629001 என்ற முகவரியிலோ அல்லது 04652- 233944 என்ற தொலைபேசியிலோ தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story