ராமநாதபுரத்தில் அதிகரித்து வரும் போதை ஊசி பழக்கம்; 2 வாலிபர்கள் சிக்கினர் முக்கிய குற்றவாளிகளுக்கு வலைவீச்சு
ராமநாதபுரத்தில் சமீபகாலமாக போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருகிறது. போலீசாரின் சோதனையில் போதை ஊசி போட்டுக்கொண்ட 2 வாலிபர்கள் சிக்கினர். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மது, சிகரெட் போன்றவற்றை தொடர்ந்து இளைஞர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. குறிப்பாக இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டது. இதனை நிரூபிக்கும் வகையில் ராமநாதபுரம் நகரில் ஒருசில இடங்களில் சந்தேகத்திற்கு உரிய வகையில் ஊசிகள், மாத்திரைகள் அதிகஅளவில் கிடந்துள்ளது. இதுபற்றி அறிந்த போலீசார் அவற்றை கைப்பற்றி விசாரித்தபோது போதை ஊசி மற்றும் போதை தரும் மாத்திரைகளை பயன்படுத்தியது தெரியவந்தது. இன்னும் சிலர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அதில் போதை ஏற்றி கொண்டு வருகின்றனர். இதுபற்றி தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து போதை மாத்திரை ஆசாமிகள் குறித்து கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளை பரவலாக பயன்படுத்தி வருவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சிறப்பு குற்ற தனிப்பிரிவு போலீசார் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த தனிப்பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் ராமநாதபுரம் நகரில் மதுரை ரோட்டில் பழைய சோதனை சாவடி பகுதியில் போதை நிலையில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் அந்த 2 வாலிபர்களும் தூக்க மாத்திரைகளை பொடியாக்கி அதனை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் கை நரம்புகளில் ஏற்றி அரை மயக்கத்தில் போதையாக இருந்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வாலிபர்களின் பெற்றோர்களை வரவழைத்து உரிய அறிவுரைகள் வழங்கி பிள்ளைகளை கண்காணித்து நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களை போன்று பலர் தூக்க மாத்திரைகளை வாங்கி வந்து மகர்நோன்பு திடல், பழைய-புதிய பஸ் நிலையம், பழைய சோதனை சாவடி பகுதிகளில் அடிக்கடி உடலில் ஏற்றி போதை மயக்கத்தில் இருந்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற நபர்களுக்கு சிலர் போதை மாத்திரைகளையும், ஊசிகளையும் இருக்கும் இடத்திற்கே வந்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நபர்கள் குறித்த முக்கிய தகவல் தெரியவந்துள்ளதால் அவர்களை மடக்கி பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மனஅமைதிக்காகவும், தூக்கமின்மைக்காகவும் விற்பனை செய்யப்படும் தூக்க மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வருவது உடல்நலத்திற்கு தீங்கானது. இதுபோன்ற மாத்திரைகளை டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என்று மருந்து கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்படும். இதுதவிர மாவட்டத்தில் மேற்கொண்ட சோதனையில் பரமக்குடியில் வள்ளி என்ற பெண் ஒருவர் 2 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கீழக்கரை பகுதியில் சுமார் 6 கிலோ எடையிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை தொடர்்ந்து விற்பனை செய்பவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ராமநாதபுரத்தில் தூக்க மாத்திரைகளை போதை ஊசிகளாக இளைஞர்கள் பயன்படுத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story