பாசன சங்கங்கள் மூலமாக குடிமராமத்து பணிகளை விவசாயிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் அதிகாரி பேச்சு


பாசன சங்கங்கள் மூலமாக குடிமராமத்து பணிகளை விவசாயிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 11 July 2019 10:45 PM GMT (Updated: 11 July 2019 7:08 PM GMT)

பாசன சங்கங்கள் மூலமாக குடிமராமத்து பணிகளை விவசாயிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் பாலாஜி கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிமராமத்து திட்ட பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளரும் (பாசனம்), சிறப்பு அலுவலருமான (குடிமராமத்து பணிகள்) பாலாஜி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடப்பு ஆண்டில் 1,829 குடிமராமத்து பணிகளை ரூ.499 கோடியே 68 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுப்பிக்கும் பணி

இதில் நாகை மாவட்டத்தில் நீர்்வள ஆதாரத்துறையின் மூலமாக ரூ.16.59 கோடி மதிப்பில் 82 குடிமராமத்து பணிகள் நடைபெற உள்ளன. இந்த திட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றை தூர்வாரவும், சேதமடைந்த கட்டுமானங்களை புதுப்பிக்க மற்றும் அடைப்பு பலகைகளை புதுப்பிக்கும் பணியும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அரசால் அறிவிக்கப்பட்ட பணிகளை அதனை பயன்படுத்தும் விவசாயிகள் 50 சதவீதத்திற்கு மேலாக உள்ள உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்படும் சங்கங்கள் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது.

விவசாயிகளின் பங்களிப்பு

இந்த பணிகளுக்கான மொத்த மதிப்பில் 90 சதவீதம் அரசு நிதியாகவும், 10 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகவும் இருக்கும். எனவே, விவசாயிகள் குடிமராமத்து பணிகளுக்கான விவரத்தினை நீர்வள ஆதாரத்துறையின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். குடிமராமத்து பணிகளை விவசாயிகள் பாசன சங்கங்களின் மூலமாக சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கஜா மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு கூடுதல் திட்ட இயக்குனர் பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் கண்மணி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் திருவேட்டைச்செல்வம், ஆசைத்தம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story