வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் தடையில்லை என்பது உள்நாட்டு வணிகர்களை முடக்கும் நடவடிக்கை - விக்கிரமராஜா பேட்டி
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் தடையில்லை என்பது உள்நாட்டு வணிகர்களை முடக்கும் செயல் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
திருப்பூர்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மற்றும் மறைந்த நிர்வாகி ராஜசேகர் நினைவேந்தல் கூட்டம் பல்லடம் ரோட்டில் தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லாலா டி.கணேசன் வரவேற்று பேசினார்.
மாநில துணை தலைவர் பாலநாகமாணிக்கம், மாநில துணை தலைவர் ஞானசேகரன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை சட்டத்தை கோர்ட்டு உறுதி செய்துள்ளது. அதே வேளையில் ஆவின் பால் பாக்கெட்டுகளையும் மாற்ற வேண்டும். பாட்டில் போன்ற பொருட்களிலே விற்கப்பட வேண்டும். அதே போல தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில் வியாபாரிகளை, அதிகாரிகள் அச்சுறுத்தி, அபராதம் விதிப்பதை விட்டு விட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முதலில் அதற்கு மாற்று பொருளை அரசு தேர்வு செய்ய வேண்டும். இதன் பின்னர் தான் வியாபாரிகளுக்கு நெருக்கடி தர வேண்டும். இதே கருத்தை கோர்ட்டும் கூறியிருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த வேண்டும்.
ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் தடையில்லை என்று அரசு கூறி வருகிறது. இது உள்நாட்டு வணிகர்களை முடக்க கூடிய நடவடிக்கை. இந்த அரசு வியாபாரிகளை பழிவாங்குகிறதோ? என்ற சந்தேகம் வியாபாரிகள் மத்தியில் எழுந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை எளிமைப்படுத்துவோம் என்று கூறி வருகிறது. ஆனால் எப்படி எளிமைப்படுத்துவோம் என்ற சாராம்சத்தை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இது தொடர்பாக மத்திய மந்திரியை சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்க உள்ளோம். 28 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி. முறை அகற்றப்பட்டு, 5 மற்றும் 12 சதவீத முறையை மட்டுமே அமல்படுத்த வேண்டும்.
வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள், நிறுவனங்கள் வரி கட்ட முடியாமல் திணறி வருகிறோம். இதனால் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கடைகளுக்கான வரியை முழுமையாக அகற்றி, உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதிக்க இடம் கொடுக்க கூடாது. கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு கடைகள் திறக்க ஆயத்த பணிகள் செய்து கொண்டிருக்கின்றன. அதன்படி வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இந்தியா முழுவதும் 6 ஆயிரம் கிளைகளை திறப்பதற்கான தகுந்த இடம் பார்த்து வருகிறது.
இதுபோல, ஏறக்குறைய 4 முதல் 5 நிறுவனங்கள் இணைந்து நாடு முழுவதும் 30 ஆயிரம் கிளை கடைகளை முதல் கட்டமாக திறக்க ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றன. உள்நாட்டு வணிகத்தை வீழ்த்தி விட்டு, அன்னிய நாட்டு வணிகத்தை வளர்த்து விட்டால், தமிழக வியாபாரிகள் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் ஆகிவிடுவார்கள். மத்திய அரசு, இதை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்கள் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் மாவட்ட பொருளாளர் குமரன் நன்றி கூறினார்.