92 வயது தியாகிக்கு பென்சன் வழங்க மறுப்பு: மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மதுரை ஐகோர்ட்டில் தள்ளுபடி


92 வயது தியாகிக்கு பென்சன் வழங்க மறுப்பு: மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு மதுரை ஐகோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 13 July 2019 4:00 AM IST (Updated: 13 July 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

92 வயது தியாகிக்கு 4 வாரங்களில் பென்சன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

மதுரை,

மதுரை புதூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். 92 வயதான இவர், சுதந்திரப் போராட்ட தியாகி. கடந்த 1942–ம் ஆண்டு நாட்டின் விடுதலைக்கான வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் பங்கேற்றார். இதற்காக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் கடந்த 1942–ம் ஆண்டு நவம்பர் 3–ந் தேதி முதல் 1943 ஜூன் 10–ந் தேதி வரை அடைக்கப்பட்டார்.

தமிழக அரசின் பென்சன் பெற்று வரும் இவர், மத்திய அரசின் பென்சன் கேட்டு விண்ணப்பித்தார். இவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. தன்னுடன் சிறையில் இருந்த 2 பேருடைய சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால் ஒரே ஒருவருடைய சான்றிதழை மட்டுமே தாக்கல் செய்ததாகவும், மத்திய அரசின் பென்சன் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிந்துரைக்கவில்லை என்றும் கூறி இவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

இதனை எதிர்த்து அவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மத்திய அரசின் பென்சனை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் துணைச்செயலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில்,“ சிறையில் இருந்ததற்கான இருவரின் சான்றிதழ்கள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் மனுதாரர், மாயாண்டிபாரதி என்பவரிடம் இருந்து மட்டுமே சான்றிதழ் பெற்று தாக்கல் செய்துள்ளார். அதேநேரம் தமிழக அரசும் இவருக்கு பரிந்துரைக்கவில்லை. எனவே இவருக்கு மத்திய அரசின் பென்சன் வழங்க முடியாது“ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் ஏற்கனவே தமிழக அரசின் பென்சன் பெற்று வரும் நிலையில், இதை காரணமாகக் கொண்டே மத்திய அரசு பென்சன் வழங்க வேண்டும்“ என தனி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் தேவையில்லாத காரணங்களை கூறி மத்திய அரசு நிராகரிக்கிறது என வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள்,“ தியாகி ராமலிங்கம் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதற்காக ஏற்கனவே தியாகி மாயாண்டி பாரதி சான்றளித்து உள்ளார். மாநில அரசின் பென்சனை பெற்றுள்ளார். இதுவே போதுமானது. எனவே தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தியாகி பென்சன் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை 4 வாரங்களுக்குள் நிறைவேற்ற மத்திய அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என உத்தரவிட்டுள்ளனர்.


Next Story