திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது


திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2019 3:30 AM IST (Updated: 13 July 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

மணவாளக்குறிச்சி பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலத்தை சேர்ந்தவர் மார்சல் வேதசிங். கடந்த டிசம்பர் மாதம் இவரது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை சிலர் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வெள்ளிச்சந்தை அருகே சடையால்புதூரை சேர்ந்தவர் டைட்டஸ் தீஸ்மாஸ் (வயது 45). இவர் கடந்த மாதம் 13-ந்தேதி ராணித்தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பெரும்செல்வவிளையில் சென்ற போது சிலர் அவரை வழிமறித்து அவரிடமிருந்த ரூ.17 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மணவாளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சையத் உசேன் மற்றும் போலீசார் பிள்ளையார்கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் சேரமங்கலத்தை சேர்ந்த நவீன் (20), நாகர்கோவில் தம்மத்துகோணத்தை சேர்ந்த கார்த்திக் (21) மற்றும் புன்னைநகரை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பது தெரிய வந்தது. இவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story