காட்டு யானைகளிடம் இருந்து தப்பிக்க சூரிய மின்வேலி அமைக்கும் பொதுமக்கள்
கூடலூர் பகுதியில் காட்டு யானைகளிடம் பாதுகாப்பாக இருக்க சூரிய மின்வேலிகளை அமைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர்,
கேரளா- தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இணையும் எல்லைகளில் கூடலூர் அமைந்துள்ளது. 3 மாநிலங்களுக்கு சொந்தமான முதுமலை, முத்தங்கா, பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் அடர்ந்த வனங்களும் உள்ளது. கேரளா தொடங்கி நீலகிரி வழியாக கர்நாடகாவுக்கு ஒவ்வொரு காலக்கட்டங்களில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப காட்டு யானைகள் இடம் பெயர்வது வழக்கம்.
இவ்வாறு இடம்பெயர்ந்து செல்லும் போது குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைந்து விடுகிறது. இதனால் மனித- வனவிலங்கு மோதல்கள் அடிக்கடி ஏற்படுகிறது. கூடலூர் பகுதியில் காட்டு யானைகளால் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது. வீடுகள், விவசாய பயிர்களை அடிக்கடி காட்டு யானைகள் சேதப்படுத்துகின்றன. இதுதவிர வனப்பகுதிக்குள் உணவு கிடைக்காத காரணத்தால் உணவு தேடி விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து விடுகின்றன.
இதனால் பொருளாதார இழப்பு ஏற்பட்டு அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். காட்டு யானைகள் வருகையை தடுக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதேபோல் வனத்துறையினர் இரவு பகலாக காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் எந்த பலனும் கிடைப்பது இல்லை. இதனால் காட்டு யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினரும் சோர்வடைந்து வருகின்றனர்.
கூடலூர், ஓவேலி, தேவர்சோலை, தொரப்பள்ளி, ஸ்ரீமதுரை, தேவாலா உள்ளிட்ட பகுதி மக்கள் காட்டு யானைகளால் நிம்மதி இழந்துள்ளனர். இதனால் காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க சூரிய சக்தியில் இயங்கக்கூடிய மின்வேலிகளை அமைக்கும் பணியில் பொதுமக்கள், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தொரப்பள்ளி, ஏச்சம்வயல், வடவயல், புத்தூர்வயல் மற்றும் தேவர்சோலை உள்ளிட்ட பகுதியில் மின்வேலிகள் பொருத்தப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
காட்டு யானைகள் சர்வ சாதாரணமாக ஊருக்குள் வரத்தொடங்கி விட்டது. இதனால் உயிரை பாதுகாக்க மின்வேலி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் செலவு என்றாலும் பாதுகாப்பாக இருக்க இதை விட வேறு வழி தெரிய வில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைகளின் வழித்தடங்கள் மறிக்கப்படுவதாலேயே அவைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. தற்போது சூரிய மின்வேலிகள் அதிகளவு அமைக்கப்பட்டால் காட்டு யானைகள் வழிமாறி அதிகளவு ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளது என்று கூறினர்.
Related Tags :
Next Story