ஏ.டி.எம். மையத்தில் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த முதியவர்


ஏ.டி.எம். மையத்தில் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த முதியவர்
x
தினத்தந்தி 13 July 2019 10:45 PM GMT (Updated: 13 July 2019 7:12 PM GMT)

ஏ.டி.எம். மையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 ஆயிரத்தை கண்டெடுத்த முதியவர், நீண்ட போராட்டத்துக்கு பிறகு அதை போலீசார் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தார்.

பூந்தமல்லி,

சென்னை அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 58). இவர், கடந்த 1-ந்தேதி அங்குள்ள தனியார் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அங்கு ஏ.டி.எம். எந்திரம் அருகே ரூ.10 ஆயிரம் கேட்பாரற்று கிடந்தது.

யாரோ அதை தவறிவிட்டு சென்று இருப்பதை அறிந்த அவர், பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும்படி தனியார் வங்கியில் ஒப்படைத்தார். ஆனால் அதிகாரிகள் சரியான ஒத்துழைப்பு தராததால் ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் செய்தார்.

பணத்தை தவறவிட்ட நபரை கண்டுபிடிக்கும்வரை அந்த பணத்தை ராமச்சந்திரனே வைத்து இருக்கும்படி கூறிய போலீசார், ஏ.டி.எம்.மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் பணத்தை தவற விட்டுச்சென்றது ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த பத்மநாபன்(59) என்பதும், ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் என்பதும் தெரிந்தது. பத்மநாபன், ஏ.டி.எம். எந்திரத்தில் முதலில் ரூ.10 ஆயிரம் எடுத்து உள்ளார். மீண்டும் ரூ.10 ஆயிரம் எடுக்க முயன்றார்.

நீண்டநேரமாக பணம் வராததால் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என நினைத்து சென்றுவிட்டார். ஆனால் சிறிதுநேரம் கழித்து ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வெளியே வந்து விழுந்துள்ளது தெரிந்தது.

நீண்டபோராட்டத்துக்கு பிறகு ரூ.10 ஆயிரத்தை கண்டெடுத்த ராமச்சந்திரனே போலீசார் முன்னிலையில் அதன் உரிமையாளரான பத்மநாபனிடம் ஒப்படைத்தார். நேர்மையாக செயல்பட்ட ராமச்சந்திரனை போலீசாரும், பத்மநாபனும் வெகுவாக பாராட்டினர்.

Next Story