தமிழகத்தில் இதுவரை 54½ லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வினியோகம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


தமிழகத்தில் இதுவரை 54½ லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வினியோகம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 14 July 2019 4:30 AM IST (Updated: 14 July 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இதுவரை 54½ லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வினியோகிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகள் 1,500 பேருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நாகர்கோவில் அருகே சுங்கான் கடையில் உள்ள வின்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியில் நடக்கிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் விமானம் மூலம் நேற்று மாலை மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் இரவு 8.30 மணியளவில் கன்னியாகுமரியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தார்.

உற்சாக வரவேற்பு

அங்கு அவருக்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோரும் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சதாசிவம், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார், அழகேசன், இலக்கிய அணி துணை செயலாளர் பகவதியப்பன், கொட்டாரம் நகர செயலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வு

அதன்பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் எல்லா துறையிலும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு கொண்டு வந்து, மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதுடன், அவர்கள் தமிழோடு ஆங்கிலத்தையும் சரளமாக கற்று கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வை பொறுத்த வரை தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தி வருகிறோம். தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களையும் படித்தால் நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு 100 சதவீதம் விடை அளிக்க முடியும். இதை அறிந்து உத்தரபிரதேச துணை முதல்-மந்திரியே வியந்து போனார்.

தமிழகத்தில் பெண்கள் படிக்கும் அனைத்து அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கழிப்பிட வசதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இதற்கு ரூ.1,200 கோடிக்கு மேல் ஆகும். படிப்படியாக அமல் படுத்தப்படும்.

54 ½ லட்சம் மடிக்கணினி

தமிழகத்தில் இதுவரை 54 லட்சத்து 62 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வினியோகித்து வரலாற்று சாதனை படைத்து உள்ளோம்.

அரசு அனுமதியில்லாமல் 700-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகிறது. அந்த பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

Next Story