கொடிவேரி–பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு கோபி பகுதியில் 2 ஆயிரம் கடைகள் அடைப்பு; போலீஸ் குவிப்பு


கொடிவேரி–பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு கோபி பகுதியில் 2 ஆயிரம் கடைகள் அடைப்பு; போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 13 July 2019 11:15 PM GMT (Updated: 13 July 2019 8:09 PM GMT)

கொடிவேரி– பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபி பகுதியில் 2 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோபி,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டுவரவேண்டும் என்று பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி கொடிவேரி அணையின் மேல் பகுதியில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. இதனால் பெருந்துறை பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இந்த நிலையில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் பாசனம் பாதிக்கப்படும் என்று கூறி தடப்பள்ளி–அரக்கன்கோட்டை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை கொடிவேரி அணையின் கீழ் பகுதியில் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை நிறுத்த வேண்டும் எனக்கூறி கொடிவேரி அணையை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கொடிவேரி அணையில் தொடர்ந்து கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வந்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அணையின் கீழ் பகுதியில் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. அதன்படி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கோபி பெரியார் திடலில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் கோபி, டி.என்.பாளையம், கூகலூர், கள்ளிப்பட்டி உள்பட 30–க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இதையொட்டி அங்கு 200–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கவனஈர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று கோபி பஸ் நிலையம், டி.என்.பாளையம், ஏளூர், கரட்டடிபாளையம், கூகலூர், கள்ளிபட்டி, கொண்டையம்பாளையம், டி.ஜி.புதூர், புஞ்சைதுறையம் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள நகைக்கடை, மளிகைக்கடை, ஓட்டல்கள் என சுமார் 2 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் இல்லை. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. கோபி பஸ் நிலையம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story