கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அரசு பொருட்காட்சி வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது


கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அரசு பொருட்காட்சி வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 15 July 2019 3:45 AM IST (Updated: 15 July 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் அரசு பொருட்காட்சி வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.

கரூர்,

கரூர் மாவட்டம் திருவள்ளுவர் மைதானத்தில் வருகிற 27-ந்தேதி அன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அரசு பொருட்காட்சி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியபோது கூறியதாவது:-

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அனைத்துத்துறைகளையும் ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பொருட்காட்சி கரூர் நகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் வருகிற 27-ந்தேதி அன்று தொடங்கி தொடர்ந்து 45 நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது. இந்த பொருட்காட்சியில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட 40 அரசுத் துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு, அந்தந்த துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கப்படவுள்ளது.

அரசுத்துறை அரங்குகள் மட்டும் இல்லாது பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டுகளும், தனியார் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியானது தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்திருக்கும். மேலும் பஸ்கள் அரசு பொருட்காட்சி மைதானம் வழியாக செல்வதற்கு போக்குவரத்துத்துறையினர் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பஸ்களில் “அரசுபொருட்காட்சி” என்ற ஒட்டுவில்லைகளையும் ஒட்டியிருக்க வேண்டும். மேலும் தீயணைப்பு வாகனங்களை முன்எச்சரிக்கையாக நிறுத்தி வைத்து பாதுகாப்பினை பலப்படுத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாவேந்தன், பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணு பிரியா, கரூர் கோட்டாட்சியர் சந்தியா, சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் சரவணமூர்த்தி, மாவட்்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கணேஷ், மாவட்ட ஆதி திராவிடர்நல அதிகாரி லீலாவதி, உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் செந்தில்குமார், ராஜாமணி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story