ஈரோட்டில், சூறாவளி காற்றுடன் பலத்த மழை - மரம் முறிந்து விழுந்து 2 பேர் காயம்


ஈரோட்டில், சூறாவளி காற்றுடன் பலத்த மழை - மரம் முறிந்து விழுந்து 2 பேர் காயம்
x
தினத்தந்தி 15 July 2019 4:15 AM IST (Updated: 15 July 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரம் முறிந்து விழுந்து 2 பேர் காயம் அடைந்தனர்.

ஈரோடு, 

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக வாட்டி வதைத்தது. பகல் நேரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடிப்பது போல வெப்ப சலனம் அதிகமாக இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதில் குண்டேரிப்பள்ளம் பகுதியில் 22.4 மில்லி மீட்டர், கோபிசெட்டிபாளையம் பகுதியில் 13 மில்லி மீட்டர், கவுந்தப்பாடி பகுதியில் 10 மில்லி மீட்டர் மழைஅளவு பதிவாகி இருந்தது.

இந்தநிலையில் நேற்று பகலிலும் ஈரோட்டில் வெயில் அதிகமாக இருந்தது. மாலை 5 மணிஅளவில் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியது. காற்றுடன் சேர்ந்து மழையும் பொழிய தொடங்கியது. சிறிதுநேரத்தில் பலத்த மழையாக மாறியது. தொடர்ந்து ஒரு மணிநேரமாக மழை கொட்டி தீர்த்தது.

சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு வில்லரசம்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான அரசமரம் முறிந்து கீழே விழுந்தது. அப்போது மழைக்காக மரத்துக்கு அடியில் ஒதுங்கி நின்றவர்கள் மீது மரம் விழுந்தது. இதில் ஈரோடு மாணிக்கம்பாளையம் ராம்நகரை சேர்ந்த முருகேசன் (வயது 39), வில்லரசம்பட்டி மொக்கையம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமியின் மகன் பூவரசன் (15) ஆகியோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று மரக்கிளைகளை அப்புறப்படுத்தி, காயம் அடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்களை கார் மூலமாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மரம் சரிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மொபட் சேதமடைந்தது. அதுமட்டுமின்றி ஒரு மின்கம்பமும் சரிந்து விழுந்தது.

இதேபோல் காளைமாட்டு சிலை பகுதியில் சாலையோரமாக வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகை சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பறந்து சென்று மின்கம்பிகளின் மீது விழுந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் மின்கம்பிகளில் சிக்கி இருந்த விளம்பர பதாகைகளை அகற்றினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகள், கடைகள் முன்பு இருந்த விளம்பர பலகைகள் தூக்கி வீசப்பட்டு ரோடுகளில் ஆங்காங்கே விழுந்து கிடந்தன. மேலும் வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் சிமெண்டு மேற்கூரையும் காற்றில் பறந்தது.

பலத்த மழை காரணமாக ஈரோடு சத்தி ரோடு, மேட்டூர் ரோடு, பிரப் ரோடு, ஆர்.கே.வி. ரோடு, கச்சேரி வீதி, நேதாஜி ரோடு, பெருந்துறை ரோடு, வி.சி.டி.வி. ரோடு, நேதாஜி காய்கறி மார்க்கெட், கோட்டை முனியப்பன் கோவில் வீதி உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. அங்கு குளம்போல தண்ணீர் தேங்கி நின்றது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு சத்தி ரோட்டில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளும், மின் கேபிள் பதிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. அங்கு நேற்று பெய்த மழையால் ஏற்கனவே தோண்டி மூடப்பட்ட குழியில் பஸ்சின் சக்கரம் சிக்கியது.

சூளையில் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாத்திரங்கள் மூலமாக வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியே எடுத்து ஊற்றினார்கள். சூறவாளி காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மின் வினியோகம் தடைப்பட்டது.

இதேபோல் பெருந்துறையில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரையும், புஞ்சைபுளியம்பட்டியில் மாலை 3 மணி முதல் 3.30 மணி வரையும் மழை பெய்தது. தாளவாடி அருகே உள்ள தலமலை, கோடிபுரத்தில் மதியம் 2 மணி முதல் 2.15 மணி வரையும், டி.என்.பாளையத்தில் பகல் 11 மணி முதல் 11.10 மணி வரையும் சாரல் மழை பெய்தது.

Next Story