பெருந்துறை தொகுதி மக்களுக்கு குடி தண்ணீர் வழங்கும், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு இல்லை - நீரேற்றம் செய்யும் இடத்தை மாற்றம் செய்யவே கோரிக்கை


பெருந்துறை தொகுதி மக்களுக்கு குடி தண்ணீர் வழங்கும், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு இல்லை - நீரேற்றம் செய்யும் இடத்தை மாற்றம் செய்யவே கோரிக்கை
x
தினத்தந்தி 14 July 2019 10:30 PM GMT (Updated: 15 July 2019 12:06 AM GMT)

பெருந்துறை தொகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு இல்லை, நீரேற்றம் செய்யும் இடத்தை மாற்றம் செய்யவே கோரிக்கை விடுவதாக போராட்டக்குழுவினர் கூறி உள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று பெருந்துறை. விவசாயமும், நெசவும் நிறைந்த இந்த தொகுதி சமீப காலமாக தொழில் துறையிலும் வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஆனால் தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியான பகுதிகளாகும். குடிநீர் பற்றாக்குறையால் வாடும் மக்கள், வானம் பார்த்த பூமி என்று அதிகம் தரிசு நிலங்களை கொண்ட பகுதி. அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் இந்த தொகுதியின் சில பகுதிகள் நீர் பெறும் வாய்ப்பு உள்ளது. அதுவும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பி, நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டமாக உள்ளது. எனவே குடிநீருக்கு என்று ஒரு திட்டம் வேண்டும் என்று பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ. தோப்பு என்.டி.வெங்கடாசலம் போராடி பெற்ற திட்டம் கொடிவேரி-பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கிவைக்கப்பட்ட இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.224 கோடியாகும். 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைக்கப்பட்டு, உடனடி பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது கொடிவேரி-பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம். சுமார் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது.

இதற்காக அணைக்கட்டையொட்டி தடப்பள்ளி வாய்க்காலுக்கு நீர் பிரியும் பகுதியில் தொட்டி கட்டும் பணி தொடங்கியது. இது தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகளுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே நீரேற்று தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதேபோல் பெருந்துறை பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மனு கொடுத்தனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் உயர்மட்ட குழு அமைத்து அதன்படி திட்டத்தை நிறைவேற்றலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி உயர்மட்ட குழுவினர் ஆய்வு நடத்தி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் குடிநீர் தொட்டி அமைக்கலாம் என்று அறிவித்தார்கள். அதைத்தொடர்ந்து மீண்டும் பணிகள் தொடங்கின.

இந்தநிலையில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசன விவசாயிகள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.

இதுபற்றி தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபி.தளபதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கொடிவேரி-பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு என்பது தவறான தகவல். அந்த திட்டத்தை எள்ளளவும் நாங்கள் எதிர்க்கவில்லை. நமது மக்களுக்கு குடிநீர் கொடுக்கும் திட்டத்தை எதிர்க்கும் அளவுக்கு நாங்கள் எப்போதும் செல்லமாட்டோம். அணையை ஒட்டி நீரேற்றம் செய்யும் தொட்டி அமைக்கக்கூடாது என்றுதான் எங்கள் எதிர்ப்பினை பதிவு செய்கிறோம்.

கொடிவேரி அணைக்கட்டு மிகவும் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க அணைக்கட்டு. இந்த அணைக்கட்டின் தொழில் நுட்பம் தற்போது இருக்கும் பொறியாளர்கள் யாருக்கும் பிடிபடாதது.

வாய்க்காலில் 800 கன அடி தண்ணீர் விடப்பட்டாலும் பாசனத்துக்கு போக மீதம் உள்ள 400 கன அடி தண்ணீர் அப்படியே பவானி ஆற்றுக்கு கசிவு நீராக பெறப்பட்டு காலிங்கராயன் பாசனத்துக்கு விடப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு தொழில் நுட்பம் ஏதோ ஒரு விஷய செயலால் அழிந்து விடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். காரணம், ஏற்கனவே கொடிவேரி அணைக்கட்டில் இருந்த தானியங்கி மணல் போக்கியின் தொழில் நுட்பம் என்ன என்று தெரியாமல் அதை காங்கிரீட் போட்டு மூடிய பொறியாளர்கள்தான் இங்கே இருக்கிறார்கள். அதை மூடியதால் அணை தன்னைத்தானே தூர்வாரும் அற்புதம் இப்போது நிகழாமல் இருக்கிறது. இப்படி பழமையான இந்த புகழ்பெற்ற அணைக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று எண்ணுகிறோம். இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் அணையையொட்டி நீரேற்றும் தொட்டி வேண்டாம். 100 மீட்டர் உள்ளே தள்ளி போட்டு மக்களுக்கு தண்ணீர் கொடுங்கள். பெருந்துறை தொகுதி மட்டுமின்றி, கொடிவேரியிலேயே நீர்சுத்திகரிப்பு நிலையம் அமைத்து திட்டக்குழாய்கள் செல்லும் அனைத்து வறட்சியான கிராமங்களுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

கொடிவேரி-பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் மிகப்பெரிய குடிநீர் திட்டம். இதில் இருக்கும் எதிர்ப்புகளின் நியாயத்தை உணர்ந்து முறையாக மக்களுக்கு குடிநீர் கிடைக்கவும், பாரம்பரிய வரலாற்று சின்னமான கொடிவேரி அணைக்கட்டுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

Next Story