கும்மிடிப்பூண்டியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் திருட்டு மதுபாட்டில்களையும் அள்ளிச்சென்றனர்


கும்மிடிப்பூண்டியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் திருட்டு மதுபாட்டில்களையும் அள்ளிச்சென்றனர்
x
தினத்தந்தி 16 July 2019 4:00 AM IST (Updated: 15 July 2019 10:17 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் மதுபாட்டில்களையும் திருடிச்சென்ற மர்மநபர்களை 2 தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் ஏரிக்கரை பகுதியில் அரசு மதுபானக்கடை உள்ளது. நேற்று அதிகாலை அப்பகுதியில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கிருபானந்தன் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது கடையின் பூட்டுகள் மற்றும் அதனையடுத்து உள்ள இரும்பு ஷட்டர் கதவின் பூட்டுகள் ஆகியவை கடப்பாரை கொண்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்ததை கண்டார். மேலும் கடையின் உள்பக்கம் அனைத்து மின்விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன.

இதனையடுத்து கடையின் மேற்பார்வையாளரான பெரியபாளையம் அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 46) என்பவருக்கு கும்மிடிப்பூண்டி போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அவர் கடைக்கு வந்து பார்த்த போது, இரும்பு லாக்கரை உடைத்து அதிலிருந்த 3 நாள் வசூலான பணமான் ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் கடையில் இருந்த உயர்ரக மதுபாட்டில்களையும் மர்ம நபர்கள் அள்ளிச்சென்று உள்ளனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடையில் திருடிச்சென்ற மர்ம நபர்கள் அங்குள்ள நாய் ஒன்றை கடப்பாரையால் தாக்கி கொன்று முள்புதர் அருகே வீசிவிட்டு சென்று இருப்பதும், அவர்கள் அணிந்து வந்த காலணிகள் அதே பகுதியில் கிடப்பதும் கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் முக்கிய தடயங்களை சேகரித்து சென்றனர். கடந்த சில மாதங்களில் கும்மிடிப்பூண்டி பகுதியில் தொடர்ந்து மதுபானக்கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது 3-வதாக இந்த மதுக்கடையில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 தனிப்படைகளை அமைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலை வீசி தேடிவருகின்றனர்.

Next Story