நாக்பூரில் மாடல் அழகியை கொலை செய்த காதலன்


நாக்பூரில் மாடல் அழகியை கொலை செய்த காதலன்
x
தினத்தந்தி 15 July 2019 10:17 PM GMT (Updated: 15 July 2019 10:17 PM GMT)

நாக்பூரில் மாடல் அழகியை கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

நாக்பூர்,

நாக்பூர், சால்பி பாடா பகுதியில் உள்ள பண்துர்ணா- நாக்பூர் நெடுஞ்சாலையில் பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த பெண் நாக்பூரை சேர்ந்த மாடல் அழகி குஷி பரிகார்(வயது19) என்பதும், உள்ளூரில் நடந்த பல்வேறு பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டு வந்த அவர், பிரபல மாடல் அழகியாக மாற முயற்சி செய்து வந்ததும் தெரியவந்தது.

காதலன் கைது

இதைத்தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் குஷி பரிகாரின் காதலர் அஷ்ரப் சேக் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் தான் மாடல் அழகியை கொலை செய்தது தெரியவந்தது.

அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், குஷி பரிகார் தன்னுடன் மட்டும் அல்லாமல் மேலும் சில ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பழகியது தனக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவரை கொலை செய்து சாவ்லி பாடா பகுதியில் உடலை வீசிவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

இதன்பேரில் அஷ்ரப் சேக்கை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story