அவினாசியில் துணிகரம், டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகளை போலீசார் தேடுகிறார்கள்


அவினாசியில் துணிகரம், டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகளை போலீசார் தேடுகிறார்கள்
x
தினத்தந்தி 15 July 2019 11:00 PM GMT (Updated: 15 July 2019 11:34 PM GMT)

அவினாசியில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த துணிகர திருட்டு குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசி சாலையப்பாளையம் ஜெய்சக்தி அவென்யூ பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அரசுத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், நிதி நிறுவன அதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி(வயது 50). இவர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி கவிதா(44). இவர் அவினாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சந்திரே‌‌ஷ் என்ற மகனும், கவின்யாஸ்ரீ(16) என்ற மகளும் உள்ளனர். இதில் சந்திரே‌‌ஷ் சீனாவில் டாக்டருக்கு படித்து வருகிறார். கவின்யாஸ்ரீ சேவூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு இவர்கள் குடும்பத்துடன் கும்பகோணம் சென்றுவிட்டனர். அதன்பிறகு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்தன.

அதில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் அதை திருடி சென்று விட்டது தெரியவந்தது.

போலீசில் புகார்

இது குறித்து தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் மர்ம ஆசாமிகளின் கைரேகைகள் எதுவும் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்தனர்.

கோவையில் இருந்து மோப்ப நாய் வெற்றி வரவழைக்கப்பட்டது. அந்த வீட்டில் மோப்பம் பிடித்த மோப்ப நாய் வெற்றி வீட்டில் இருந்து கிழக்கு நோக்கி சிறிது தூரமும், மேற்கு நோக்கி சிறிது தூரமும் ஓடி நின்று விட்டது.

திருட வந்த ஆசாமிகள் வீட்டின் காம்பவுண்ட் கேட்டை தாண்டி ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்து உள்ளனர். அதன்பின்னர் முன் கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். அதன்பிறகு வீட்டுக்குள் புகுந்து பீரோ கதவை உடைத்து அங்கு வைக்கப்பட்டு இருந்த 40 பவுன் நகைகளை திருடி விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே டாக்டர் வீட்டில் திருட்டு நடைபெற்ற தகவல் அறிந்ததும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். திருட்டு நடந்த வீட்டை ஆய்வு செய்த அவர் போலீசாரிடமும், டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் கூறும் போது, இந்த பகுதியில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம். இரவு காவலாளிகளையும் நியமிக்க குடியிருப்பு மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் இது போன்ற திருட்டை தடுக்க முடியும். டாக்டர் வீட்டில் திருடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்றார்.

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், செந்தில், தனபால் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story