மெலட்டூர் பகுதியில் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் குறுவை நடவு பணி தீவிரம்


மெலட்டூர் பகுதியில் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் குறுவை நடவு பணி தீவிரம்
x
தினத்தந்தி 16 July 2019 11:00 PM GMT (Updated: 16 July 2019 7:15 PM GMT)

மெலட்டூர் பகுதியில் ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் குறுவை நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மெலட்டூர்,

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை நெல் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்தது. அங்கு உள்ள அணைகள் வேகமாக நிரம்பின. அங்கிருந்து கிடைத்த உபரி நீர் மூலம் மேட்டூர் அணை பல முறை நிரம்பியது.

ஜூன் 12-ந் தேதிக்கு பிறகே அணை நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், உரிய பருவத்தில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாமல் தஞ்சை மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

வறண்ட ஆறுகள்

மேட்டூர் அணையில் இருந்து உரிய பருவத்தில் தண்ணீர் கிடைக்காததால், ஆழ்துளை கிணற்று பாசனம் மூலமாக மட்டுமே குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால் காவிரியின் கிளை ஆறுகளான வெட்டாறு, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இந்த ஆறுகள் மூலமாக பாசனம் பெறும் விவசாய நிலங்களில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெறவில்லை.

குறுவை நடவு

இந்த நிலையில் மெலட்டூர், நரியனூர், நரசிங்கமங்களம், அத்துவானப்பட்டி, கரம்பை உள்ளிட்ட கிராமங்களில் தற்போது ஆழ்துளை கிணற்று பாசனம் மூலம் குறுவை நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே கர்நாடகத்திடம் உரிய தண்ணீரை பெற்று மேட்டூர் அணையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆழ்துளை கிணறு வசதி இல்லாத விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story