குறுக்கு வழியில் பலன்பெறும் நோக்கத்தில் வழக்கு தொடருபவருக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தல்


குறுக்கு வழியில் பலன்பெறும் நோக்கத்தில் வழக்கு தொடருபவருக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 17 July 2019 3:15 AM IST (Updated: 17 July 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

குறுக்கு வழியில் பலன் பெறும் நோக்கத்தில் வழக்கு தொடருபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரையை சேர்ந்தவர் சுப்பையா. இவர் பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். இவர் தனக்கு சார்–பதிவாளர் நிலை–2 அளவில் பணப்பலன்களை நிர்ணயம் செய்து வழங்க பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

இந்த மனு தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் தேவையில்லாமல் 2 தடவை ஐகோர்ட்டை நாடியுள்ளார். கோர்ட்டில் வழக்கு தொடருபவர்கள் தங்களின் வழக்கிற்கான காரணம் உருவான நாளில் இருந்துகுறிப்பிட்ட நாளுக்குள் கோர்ட்டை அணுக வேண்டும். காலக்கெடு முடிந்து தாக்கல் செய்யப்படும் ரிட் மனுக்களை கோர்ட்டுகள் ஊக்குவிக்கக்கூடாது.

அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைக்காக அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து மனுக்கள் அனுப்பவும், மேல்முறையீடு செய்யவும் தேவையில்லை. ஒரே மனு அல்லது மேல்முறையீடு செய்தால் போதுமானது. பெரும்பாலான வழக்குகளில் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு அவர்களுக்கு சென்றடைந்தற்கான அத்தாட்சி சான்றிதழ்கள் இணைக்கப்படுவதில்லை. அந்த மனுக்களின் உண்மைத்தன்மை குறித்து ஐகோர்ட்டு எந்த கேள்வியும் எழுப்புவதில்லை. இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்வது நீதித்துறையை தவறாக வழிநடத்துவதாகும். தற்போது பலர் குறுக்கு வழியில் பலன் பெறும் நோக்கத்தில் அவர்களாகவே காரண காரியங்களை உருவாக்கி கோர்ட்டுக்கு வருகின்றனர்.

இதுபோல ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள எரிச்சலூட்டும் மனுக்களை அடையாளம் கண்டு, அவற்றை அதிகபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். நீதித்துறையின் பொன்னான நேரத்தை உண்மையில் நீதி தேவைப்படும் மக்ளுக்காக செலவிட வேண்டும். நீதியின் கோவிலாக விளங்கும் ஐகோர்ட்டை தங்களது சட்ட உரிமையை நிலை நாட்டுவதற்காக தூய்மையான கரங்களுடன் அணுகுபவர்களுக்கு மட்டும் விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதனால் ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்பவர்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக 6 மாதத்துக்கு முன்பாகவே மேல்முறையீடு அல்லது மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி ஒப்புகை சீட்டு பெற வேண்டும். அந்த காலக்கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனு மீது உரிய முடிவெடுக்க வேண்டும். அதன் பின்பு தான் ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story