5 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்ததன் எதிரொலி: ராமநாதபுரம் மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு


5 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்ததன் எதிரொலி: ராமநாதபுரம் மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 17 July 2019 4:30 AM IST (Updated: 17 July 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்ததன் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டியதாக 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த 14 பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், மதுரையை சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

‘அன்சாருல்லா’ என்ற இயக்கத்தில் ஈடுபட்டு வந்த அவர்களை, டெல்லியில் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறியதாவது:–

தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்து இருப்பதாக கூறி இருப்பதால், மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை தனிப்படை போலீசார் ரகசியமாக 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அவர்கள் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் என்றாலும் வெளிநாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறிவிட்டனர். அவர்களின் வீடுகள் மட்டும் கீழக்கரையில் உள்ளன. அங்கு ஒருசிலர் மட்டுமே வசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள் ஊருக்கு வந்து சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போதைய நிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்கள் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் அதுபோன்ற இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் 5 பேர் மீதும் கடந்த காலங்களில் ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என்றும் ஆய்வு செய்து வருகிறோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் அருகே நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கேரளா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த வாகனங்களில் ஏராளமானோர் வந்துள்ளனர். அது தொடர்பாக சந்தேகப்படும்படியான சில தகவல்கள் கிடைத்ததால், அதுகுறித்து ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story