நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, மலைப்பகுதிகளில் ரூ.10 கோடி செலவில் நீர் உறிஞ்சும் குழிகள்


நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, மலைப்பகுதிகளில் ரூ.10 கோடி செலவில் நீர் உறிஞ்சும் குழிகள்
x
தினத்தந்தி 17 July 2019 4:00 AM IST (Updated: 17 July 2019 5:37 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மலைப்பகுதிகளில் நீர் உறிஞ்சும் குழிகள் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டுபோனதால், விவசாயிகள் பலர் மாற்று வழியாக ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடும் அதிகமாக காணப்படுகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், பசுமையை மீட்டெடுக்கவும் தன்னார்வலர்கள் பலர் விதைப்பந்துகள் தூவுதல், மரக்கன்று நடுதல், மழைநீர் சேகரித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகமும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மழைநீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இக்கிணறுகள் அமைக்கப்பட்ட இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இப்பணியில் ஈடுபட்ட பெண்களை பிரதமர் மோடி பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று மாவட்டத்தில் மழைநீர் சேகரிக்கும் திட்டத்தின் மற்றொரு யுக்தியாக மேற்கொள்ளப்பட்ட திட்டம் மலைத்தொடரில் நீர் உறிஞ்சும் குழிகள் அமைப்பதாகும். இத்திட்டத்திற்கு பேரணாம்பட்டு தாலுகாவில் உள்ள அரவெட்லா, மாதனூரில் உள்ள அகரம்சேரி, நாட்டறம்பள்ளியில் மள்ளகுண்டா, வாலாஜா கல்மேல்குப்பம் போன்ற பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டமானது, மரங்கள் இல்லாத சிறு குன்று போன்ற மலையை தேர்வு செய்து அதில் ஒவ்வொரு அடுக்காக கற்களை கொண்டு தடுப்பு சுவர் அமைக்கப்படும். அந்த தடுப்பு சுவரின் முன்பகுதியில் சுமார் 5 அடி ஆழத்தில் குழி வெட்டப்படும். மலையில் பெய்யும் மழை நீர் ஒவ்வொரு அடுக்கிலும் உள்ள குழியை நிரப்பி தடுப்பு சுவரை தாண்டி செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழைநீர் சேகரிக்கப்படுகிறது. மலைத்தொடரிலும் பல மாதங்கள் ஈரப்பதம் காணப்படும். அதனால் அங்கு மரங்களும் நன்றாக வளர்கிறது.

மலையில் நீர் உறிஞ்சும் குழிகள் அமைக்கப்பட்ட பின்னர் விவசாயம் செய்ய தேவையான நிலத்தடி நீர் கிடைக்கிறது என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். மலையில் மட்டும் அல்லாது மலை அடிவாரப்பகுதிகளிலும் ஆங்காங்கே குழிகளும் அமைக்கப்பட்டு அதன் அருகில் மரக்கன்றுகளும் நடப்படுகிறது.

இத்திட்டம் ரூ.10 கோடி செலவில் 312 இடங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ரூ.8 கோடிக்கு 226 இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விரிவுபடுத்தப்படும்.

Next Story