படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 July 2019 10:30 PM GMT (Updated: 17 July 2019 7:20 PM GMT)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் தங்களது கல்வித்தகுதியை உயர்த்திக் கொள்ளவும், போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்கவும், தமிழக அரசால் 01.02.2017 முதல் உயர்த்தி வழங்கப்பட்ட கூடுதல் தொகையாக பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மைக்கு ரூ.200-ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300-ம், மேல்நிலை கல்வித்தகுதிக்கு ரூ.400-ம், பட்டப்படிப்பு கல்வித்தகுதிக்கு ரூ.600-ம் அரசால் வழங்கப்படுகிறது.

(என்ஜினீயரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம்) போன்ற பட்டப்படிப்புகளுக்கு உதவித்தொகை அளிக்கப்படாது). இந்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் வேலைவாய்ப்பு துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித்தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பதிவு செய்து 5 ஆண்டுகள் 30.06.2019 அன்றைய நிலையில் முடிவுற்று இருக்க வேண்டும்.

இணையதளத்தில் வெளியீடு

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் 30.06.2019 நிலையில் 45 வயதையும், இதர வகுப்பினர் 40 வயதையும் கடந்தவராக இருக்க கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவம் https://tnvelaivaaipu.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திறகு நேரில் வருகை தந்தும், விண்ணப்பத்தினை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தில் பக்கம் 7-ல் வருவாய் ஆய்வாளரின் ஒருங்கிணைந்த சான்று, புகைப்படம், மனுதாரர் பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து கல்வி சான்றுகள் ( Tr-a-ns-f-er ce-rt-i-f-i-c-ate உள்பட) உடன் அலுவலக வேலை நாளில் நேரில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தகுதிகள்

இந்த திட்டத்தில் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அலுவலக பதிவின் காத்திருப்பு காலம் ஒரு ஆண்டு மட்டுமே. அதாவது 30.06.2018 வரை பதிவு செய்துள்ளவர்கள், பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் ரூ.600-ம், மேல்நிலை கல்வித்தகுதி ரூ.750-ம் பட்டப்படிப்பு கல்வி தகுதிக்கு ரூ.1000-ம் உயர்த்தப்பட்ட தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஆண்டு வருமானத்தில் உச்ச வரம்பு கிடையாது. வருவாய் அலுவலரின் சான்று சமர்ப்பிப்பதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் தகுதியும், விருப்பமும் உடைய தஞ்சாவூர் மாவட்ட பதிவுதாரர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story