கூடலூரில், பருவமழை போதியளவு பெய்யாததால் நெல் பயிரிடுவதை கைவிட்ட விவசாயிகள்


கூடலூரில், பருவமழை போதியளவு பெய்யாததால் நெல் பயிரிடுவதை கைவிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 18 July 2019 4:00 AM IST (Updated: 18 July 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் பருவமழை போதியளவு பெய்யாததால் நெல் பயிரிடுவதை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டனர்.

கூடலூர்,

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என ஆண்டுதோறும் 6 மாதங்கள் தொடர்ந்து பருவமழை கூடலூர் பகுதியில் பெய்வது வழக்கம். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை சராசரியாக ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் மில்லி மீட்டர் மழை பெய்தது. ஆனால் தற்போது அந்த அளவுக்கு மழை பெய்வது இல்லை. கடந்த 2018-ம் ஆண்டு கூடலூரில் 2 ஆயிரத்து 607 மில்லி மீட்டர் மழையும், தேவாலாவில் 3 ஆயிரத்து 623 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

தொடர் மழை பெய்யும் பகுதி என்பதால் இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, குறுமிளகு, காபி உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. இதேபோல் மே மாத இறுதியில் விவசாய நிலத்தை நன்கு உழுது தயார் நிலையில் விவசாயிகள் வைத்திருப்பார்கள். பின்னர் பருவமழை பெய்ய தொடங்கியதும் கூடலூர் பகுதியில் உள்ள புத்தூர்வயல், பாடந்தொரை, ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகள், புளியாம்பாரா, தொரப்பள்ளி உள்பட பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிடும் பணியில் விவசாயிகள் ஈடுபடுவார்கள்.

அடக்கன், கந்தசால், பாரதி, செந்நெல், வெளும்பி, காடகண்ணன் உள்பட பல்வேறு வகையான நெல் ரகங்களை இப்பகுதி விவசாயிகள் பயிரிடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யாமல் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பலத்த மழை பெய்து வெள்ள பெருக்கு ஏற்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் முதல் பருவமழை பெய்யும் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

ஆனால் போதியளவு பருவமழை கூடலூர் பகுதியில் பெய்யவில்லை. இதனால் நெல் பயிரிடும் பணிகளை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டுள்ளனர். சில விவசாயிகள் மிகவும் தாமதமாக நெல் நடவு செய்வதற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். வழக்கத்துக்கு மாறாக கூடலூரில் 683 மில்லி மீட்டர் மழையும், தேவாலாவில் 425 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. போதியளவு மழை இல்லாததால் ஆறுகளிலும் நீர் வரத்து இல்லை. இதனால் நெல் பயிரிடுவதை நடப்பு ஆண்டில் கைவிட்டு உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து கூடலூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

ஜூன் மாதம் பெய்யும் மழையை பொறுத்து நெல் விவசாயம் நடைபெறும். ஆனால் இதுவரை போதியளவு மழை பெய்யவில்லை. இனிமேல் நெல் விவசாயம் மேற்கொள்ள முடியாது. நெல் விவசாயத்தை கைவிட்டதால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும். பால் உற்பத்தி குறையும் அபாயம் உள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பருவமழை தீவிரமாக பெய்தால் நலன் பயக்கும். மேலும் பாரம்பரியமாக கொண்டாடப்படும் புத்தரி உள்ளிட்ட திருவிழா பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story