பழவேற்காட்டில் மீனவர்களிடையே மோதல்; அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு


பழவேற்காட்டில் மீனவர்களிடையே மோதல்; அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 17 July 2019 10:30 PM GMT (Updated: 17 July 2019 9:40 PM GMT)

பழவேற்காட்டில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவ பகுதியில் லைட்ஹவுஸ் நடுக்குப்பம் உள்ளது. இங்கு வசிப்பவர் ரமேஷ் (வயது 40). கடந்த ஆண்டு மீன்பிடிக்க சென்றபோது இவரது வீட்டில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. இது குறித்து அவர் திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்தார். அதன் பின்னர் தங்க நகையை திருடியதாக 3 பேர் மீது மீண்டும் போலீசில் புகார் செய்தார். பின்னர் அவர் தனது புகாரை வாபஸ் பெற்று கொண்டார். இந்தநிலையில் செல்போன் திருடிய வழக்கில் லைட்ஹவுஸ் நடுக்குப்பம் பகுதியை சேர்ந்த தசராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தசராஜ் கைது செய்யப்பட்டதற்கு ரமேஷ்தான் காரணம். அதற்கான அபராதமாக ரூ.28 ஆயிரத்தை ரமேஷ் ஊருக்கு செலுத்த வேண்டும். ரமேஷ் ஊரில் உள்ள அனைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு ரமேஷ் குடும்பத்தினர் மறுத்தததால் ரமேஷ் குடும்பத்தினரை ஊரை விட்டு தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. ரமேஷுடன் யாரும் பேசக்கூடாது. மீன்பிடிக்க செல்ல கூடாது என தெரிவித்ததையடுத்து இவரது குடும்பத்தினர் யாரிடம் பேசாமல் இருந்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த ரமேஷ் இது குறித்து பொன்னேரி ஆர்.டி.ஓ.விடம் புகார் செய்தார். அதன்பேரில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு வீடு திரும்பிய ரமேஷ், அவரது சகோதரர் கார்த்திக் ஆகியோர் தாக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மீண்டும் பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று ரமேஷுக்கும், அதே ஊரை சேர்ந்தவர்க்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதில் ரமேஷ், அவரது தம்பி கார்த்திக் இருவரும் அரிவாளால் வெட்டப்பட்டனர். எதிர்தரப்பை சேர்ந்த மற்றொரு ரமேஷுக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டது. 3 பேரும் சிகிச்சைக்காக பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்த பொன்னேரி காவல் உதவி கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story